/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயிலில் ஐயப்ப பக்தர்கள்; கண்காணிப்பு பணி தீவிரம்
/
ரயிலில் ஐயப்ப பக்தர்கள்; கண்காணிப்பு பணி தீவிரம்
ADDED : டிச 09, 2024 07:22 AM
சேலம்: திருப்பதி - கொல்லம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் மதியம், 2:40க்கு புறப்பட்டு, இரவு, 8:04க்கு சேலம் வந்தது. அதில் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் இருந்தனர். குறிப்பாக, 2ம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் இருந்த பக்தர்கள் சிலர், இருக்கை மீது ஐயப்ப சுவாமி படத்தை வைத்து பஜனை பாடி, கற்பூர தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து சேலம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கூறுகையில், 'ரயிலில் கற்பூரம் ஏற்றக்கூடாது என, ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. அதை மீறி கற்பூரம் ஏற்றினால், 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்படி வழக்குப்பதிந்து மேல் நடவடிக்கை தொடரும். அதனால் ரயிலில் கற்பூரம் ஏற்றிய வீடியோ பரவியது குறித்து விசாரித்து வருகிறோம். குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் செல்லும் அனைத்து ரயில்களிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது' என்றனர்.