/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பி.ஏ.சி.எல்., நிறுவன விவகாரம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த போர்க்கொடி
/
பி.ஏ.சி.எல்., நிறுவன விவகாரம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த போர்க்கொடி
பி.ஏ.சி.எல்., நிறுவன விவகாரம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த போர்க்கொடி
பி.ஏ.சி.எல்., நிறுவன விவகாரம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த போர்க்கொடி
ADDED : பிப் 08, 2024 11:00 AM
சேலம்: நாடு முழுதும் செயல்பட்ட, பி.ஏ.சி.எல்., நிறுவனம், 6 கோடிக்கும் மேற்பட்டோரிடம், 60,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு பெற்று மோசடி நடந்தது. இந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையில் கமிட்டி, 6 மாதங்களில் தீர்வு காண, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, 8 ஆண்டுகள் கடந்தும் கிடப்பில் போட்ட கல்லாகவே உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், களப்பணியாளர்கள், சேலம் கோட்டை மைதானத்தில், நேற்று காலை, 11:30 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பி.ஏ.சி.எல்., களப்பணியாளர் சங்க, சேலம் கிளை கவுரவ தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். அதில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவும், மண்டல அளவில் அலுவலகம் திறந்து, பிரச்னைக்கு தீர்வு காண கோஷம் எழுப்பினர்.
சங்க பொருளாளர் முருகேசன் பேசுகையில், ''முதலீடு பணத்தை எந்த நிபந்தனையின்றி, முதிர்வு தொகையாக வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மண்டல அளவில் அலுவலகம் திறந்து ஆவணங்கள் அடிப்படையில் விண்ணப்பம் பெறப்பட்டு, பணத்தை பட்டுவாடா செய்ய வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்த விவகாரத்தில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
அதேபோல் ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன், 'பிஏசிஎல்' நிறுவன முதலீட்டாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், ஆத்துார் பகுதி ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. அதில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய, மாநில அரசுகள், பி.ஏ.சி.எல்., நிறுவனத்திடம் இருந்து, முதலீட்டாளர்களின் முதிர்வு தொகையை எந்த நிபந்தனையுமின்றி வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். மேலும் அதே கோரிக்கையை வலியுறுத்தி, ஓமலுார் தாலுகா அலுவலகம் முன், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், நிர்வாகி சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

