/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைத்துார் ஊராட்சி அ.தி.மு.க., துணைத்தலைவர் உள்பட மூன்று பேர் ராஜினாமா கடிதம் வழங்கல்
/
பைத்துார் ஊராட்சி அ.தி.மு.க., துணைத்தலைவர் உள்பட மூன்று பேர் ராஜினாமா கடிதம் வழங்கல்
பைத்துார் ஊராட்சி அ.தி.மு.க., துணைத்தலைவர் உள்பட மூன்று பேர் ராஜினாமா கடிதம் வழங்கல்
பைத்துார் ஊராட்சி அ.தி.மு.க., துணைத்தலைவர் உள்பட மூன்று பேர் ராஜினாமா கடிதம் வழங்கல்
ADDED : டிச 31, 2024 07:38 AM
ஆத்துார்: பைத்துார் ஊராட்சியில், அ.தி.மு.க., துணைத் தலைவர், இரண்டு வார்டு உறுப்பினர்கள் என மூன்று பேர், ராஜினாமா செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, பைத்துார் ஊராட்சியில், 12 வார்டுகள் உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த கலைச்செல்வி ஊராட்சி தலைவியாக இருந்து வந்தார். இவர் மீது, தேசிய ஊரக வேலை திட்டத்தில் முறைகேடு புகாரில், உயர்நீதிமன்ற உத்தரவுபடி கடந்த ஜூலை, 29ல், கலைச்செல்வியை பதவி நீக்கம் செய்து, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார்.
கடந்த, 9ல், அ.தி.மு.க.,வை சேர்ந்த துணைத் தலைவர் சந்திரசேகருக்கு, தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்பின், தலைவராக இருந்த கலைச்செல்வி, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, பதவி நீக்கத்திற்கு தடை உத்தரவு பெற்றார். கடந்த, டிச., 26ல், மீண்டும் தலைவராக கலைச்செல்வி பொறுப்பேற்று கொண்டார்.துணைத் தலைவராக இருந்த சந்திரசேகர், நேற்று பி.டி.ஓ., பரமசிவத்திடம், ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதேபோல், 7வது வார்டு உறுப்பினர் தமிழ்செல்வி, 8வது வார்டு உறுப்பினர் மாதம்மாள் ஆகியோரும், தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக, பி.டி.ஓ.,வுக்கு தபால் அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து, துணைத் தலைவர் சந்திரசேகர் கூறுகையில், ''ஊராட்சி நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், தொடர்ந்து துணைத் தலைவராக நீடிக்க முடியாத நிலை உள்ளது. உடல் நிலை காரணமாக, துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை பி.டி.ஓ.,விடம் கொடுத்துள்ளேன். இரண்டு வார்டு உறுப்பினர்களும், ராஜினாமா செய்வதாக தபால் அனுப்பியுள்ளனர்,'' என்றார்.இதுபற்றி, ஆத்துார் பி.டி.ஓ., பரமசிவம் கூறுகையில், ''பைத்துார் ஊராட்சி துணைத் தலைவர், இரண்டு வார்டு உறுப்பினர்கள், உடல்நிலை மற்றும் சொந்த காரணத்திற்காக, தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக, கடிதம் வழங்கியுள்ளனர். இவை, சேலம் கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,''என்றார்.