/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாரதம் எங்களின் சுவாசமே... தாய் மண்ணே வணக்கம் !
/
பாரதம் எங்களின் சுவாசமே... தாய் மண்ணே வணக்கம் !
ADDED : ஆக 16, 2024 05:33 AM
சேலம்: 'பாரதம் எங்களின் சுவாசமே... தாய் மண்ணே வணக்கம்' என்ற பாடல் வரிக்கேற்ப, சுதந்திர தினம் சேலம் மாவட்டம் முழுதும் உணர்வுப்பூர்வமாக கொண்டாடப்பட்டது.
சேலம் காந்தி மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் பிருந்தாதேவி, தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். போலீஸ் படைப்பிரிவுகள், சேலம் மாவட்ட ஊர்காவல் படை, போலீஸ் இசைக்குழு உள்ளிட்ட பல்வேறு அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
மாவட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கதர் ஆடை அணிவித்து, மரியாதை செலுத்தினார். சிறப்பாக பணிபுரிந்த, 87 போலீசார் உள்பட, 338 அரசு துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு, நற்சான்றிதழ் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகள் சார்பில், 68.34 லட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் இருந்து தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற, 41 வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
தொடர்ந்து பள்ளி கல்வித்துறை சார்பில் இயற்கை, மலைவளம், நாட்டுப்பற்று, செம்மொழி, இது எங்கள் பாரதம் உள்ளிட்ட மைய கருத்துகளை வலியுறுத்தும்படி, 2,071 மாணவ, மாணவியர் மூலம் கலைநிகழ்ச்சி கள் நடந்தன.
போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, சேலம் டி.ஐ.ஜி., உமா, எஸ்.பி., கவுதம் கோயல், கூடுதல் கலெக்டர் லலித் ஆதித்ய நீலம், மாணவ, மாணவியர், பெற்றோர், மக்கள் பங்கேற்றனர். முன்னதாக தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, கலெக்டர் அஞ்சலி செலுத்தினார்.
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் ராமச்சந்திரன் கொடியேற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். வண்ண பலுான்களை பறக்கவிட்டு, காந்தி படத்துக்கு மரியாதை செலுத்தினார். மாநகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த, 118 பேர், பொது சேவை புரிந்த, 7 பேர், தனித்திறமைக்கு, 2 பேருக்கு பாராட்டு சான்றிதழ், நினைவு பரிசு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங் உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் இடங்கணசாலை, மேட்டூர், தாரமங்கலம், ஏற்காடு, கொங்கணாபுரம், இடைப்பாடி, சங்ககிரி உள்பட மாவட்டம் முழுதும், அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், அரசியல் கட்சியினர் சார்பில் பல்வேறு அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

