ADDED : நவ 04, 2024 05:18 AM
மல்லுார்: மல்லுார் அருகே வாழக்குட்டப்பட்டியை சேர்ந்தவர் மணி, 60. சைக்கிள் கடை நடத்துகிறார். நேற்று மாலை, 4:00 மணிக்கு, சேலம் - கரூர் ரயில்வே கேட் பூட்டப்பட்டிருந்தது. மல்லுாரில் இருந்து வீட்டுக்கு சென்ற மணி, ரயில்வே கேட் முன் நின்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால், 'ஸ்கூட்டி'யில் வந்த, அம்பேத்கர் நகரை சேர்ந்த சுகனேஷ், 25, வழிவிடும்படி தகராறு செய்து, மணியை தாக்கினார்.
இதை அங்கிருந்த, வாழக்குட்டப்பட்டியை சேர்ந்த சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ., செயலர் கந்தசாமி, 41, தட்டிக்கேட்டுள்ளார். அவரையும் தகாத வார்தையில் திட்டி தாக்கிவிட்டு ஓடி விட்டார்.இதனால் சுகனேசை கைது செய்ய, வாழக்குட்டப்பட்டியை சேர்ந்தவர்கள், இருசக்கர வாகனங்களை சாலை குறுக்கே நிறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர். மல்லுார் போலீசார், சுகனேசை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.
இரு தரப்பினரும் போலீஸ் ஸ்டேஷனில் குவிய பதற்றம் ஏற்பட்டது. பின், 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து, சுகனேசை, போலீசார் கைது செய்தனர்.