/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துப்பாக்கியால் சுடப்பட்ட தி.மு.க., கிளை செயலரின் உடல் ஒப்படைப்பு
/
துப்பாக்கியால் சுடப்பட்ட தி.மு.க., கிளை செயலரின் உடல் ஒப்படைப்பு
துப்பாக்கியால் சுடப்பட்ட தி.மு.க., கிளை செயலரின் உடல் ஒப்படைப்பு
துப்பாக்கியால் சுடப்பட்ட தி.மு.க., கிளை செயலரின் உடல் ஒப்படைப்பு
ADDED : நவ 25, 2025 02:05 AM
பெத்தநாயக்கன்பாளையம், கல்வராயன்மலை பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட, தி.மு.க., கிளை செயலரின் உடலை, குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்ததால் அடக்கம் செய்தனர்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கல்வராயன்மலை கீழ்நாடு ஊராட்சி, கிராங்காடு மலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 45. தி.மு.க., கிளை செயலரான இவர், கடந்த, 21ல், தனது மனைவி சரிதாவுடன் பைக்கில் சென்றபோது, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.
அதே பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் குடும்பத்துடன் நிலப்பிரச்னை தொடர்பாக, கொலை செய்துள்ளதாக, ராஜேந்திரன் மனைவி சரிதா புகாரில், கரியக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, ஆத்துார் டி.எஸ்.பி., சத்யராஜ், தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில், இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஒப்படைப்பு
நேற்று முன்தினம் இறந்த ராஜேந்திரனின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தினர். இதனால், பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. நேற்று காலை, 11:00 மணியளவில், இறந்த ராஜேந்திரனின் குடும்பத்தினருடன், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின், பிரேத பரிசோதனை செய்வதற்கு ஒப்புக் கொண்டனர். மதியம், 12:00 முதல், மதியம், 1:00 மணி வரை மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். 2:00 மணியளவில் அவரது உடலை, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். போலீசார் பாதுகாப்புடன் உடலை மாலை, 5:00 மணிக்கு சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று, அவரது தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.
மழையால் சிரமம்
இதுகுறித்து, தனிப்படை போலீசார் கூறியதாவது:
துப்பாக்கியால் சுடப்பட்டதில் உயிரிழந்த ராஜேந்திரனின் உடலை, பிரேத பரிசோதனை செய்தபோது, அவரது கழுத்து, தொண்டை பகுதியில், மொத்தம் ஐந்து குண்டுகள் இருந்தன. ரத்தப்போக்கு அதிகளவில் இருந்ததால், உயிரிழப்பு ஏற்பட்டதாக, மருத்துவர்கள் அறிக்கை வழங்கியுள்ளனர். சந்தேகத்தின்பேரில் ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோரை விசாரணை செய்து வருகிறோம். ஆனால், அவர்களை உறுதிப்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதுதவிர, கிராங்காடு பகுதியை சேர்ந்த மேலும் ஐந்து பேரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 'லோடு' துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிராங்காடு, கல்வராயன்மலை பகுதி முழுவதும் மழை பெய்து வருவதால், இறந்த இடம் உள்ளிட்ட இடங்களில் வேறு தடயங்கள் கண்டறிவதில் சிரமமான நிலை உள்ளது.
சந்தேக நபர்களிடம் எஸ்.பி., கவுதம் கோயல் விசாரணை செய்துள்ளார். மாலை நேரத்திற்கு மேல், இரவு நேரத்தில் கிராங்காடு சாலை மற்றும் அப்பகுதியில் காட்டெருமை, கரடிகள் நடமாட்டத்தால் விசாரணை செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. ஓரிரு நாளில், கொலை செய்த நபர்களை கண்டறிந்து, கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினர்.

