/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கலெக்டர் அலுவலகத்துக்கு தொடரும் குண்டு மிரட்டல்
/
கலெக்டர் அலுவலகத்துக்கு தொடரும் குண்டு மிரட்டல்
ADDED : செப் 04, 2025 01:40 AM
சேலம், சேலம் கலெக்டர் அலுவலக மின்னஞ்சலுக்கு, நேற்று காலை, 12:30 மணிக்கு ஒரு தகவல் வந்தது. அதில், 'ஆர்.டி.எக்ஸ்., எனும் வெடி பொருள் வைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வெடிக்கும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனே அங்கிருந்து, சேலம் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உதவி கமிஷனர் பரவாசுதேவன், வெடிகுண்டு தடுப்பு, கண்டுபிடித்தல், அழித்தல் பிரிவு இன்ஸ்பெக்டர் பாபு உள்ளிட்ட நிபுணர்கள், டவுன் போலீசார், கலெக்டர் அலுவலகம் வந்து மெட்டல் டிடெக்டர், எக்ஸ்பிளோர் வெப்பன் டிடெக்டர் உள்ளிட்ட அதிநவீன கருவிகள் மூலம், ஒவ்வொரு அறைகளையும் சோதனை மேற்கொண்டனர். மதியம், 1:00 முதல், 2:30 மணி வரை நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனிடையே மாநகர போலீசார் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கலெக்டர் அலுவலகம் முழுதும், போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும், குண்டு வைத்ததாக வந்த தகவல் புரளி என, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
கடந்த, 5 மாதங்களில் இதுவரை, 3 முறை கலெக்டர் அலுவலகத்துக்கு குண்டு மிரட்டல் வந்துள்ளது. கடந்த ஜூலையில், திருநெல்வேலியில் இருந்து மிரட்டல் வந்தபோது, மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மிரட்டல் வந்ததால், போலீசார் விசாரிக்கின்றனர்.