/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நடுரோட்டில் பட்டறை உரிமையாளர் வெட்டிக்கொலை ரவுடி கொலைக்கு மைத்துனர் பழிக்குப்பழி?
/
நடுரோட்டில் பட்டறை உரிமையாளர் வெட்டிக்கொலை ரவுடி கொலைக்கு மைத்துனர் பழிக்குப்பழி?
நடுரோட்டில் பட்டறை உரிமையாளர் வெட்டிக்கொலை ரவுடி கொலைக்கு மைத்துனர் பழிக்குப்பழி?
நடுரோட்டில் பட்டறை உரிமையாளர் வெட்டிக்கொலை ரவுடி கொலைக்கு மைத்துனர் பழிக்குப்பழி?
ADDED : நவ 09, 2024 01:05 AM
அயோத்தியாப்பட்டணம், நவ. 9-
பட்டப்பகலில் அரூர் நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்த பீரோ பட்டறை உரிமையாளர் மீது காரை மோதி நிறுத்தச்செய்து மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. ரவுடி காட்டூர் ஆனந்தன் கொலைக்கு, அவரது மைத்துனர் உள்ளிட்ட கும்பல் பழிக்குப்பழியாக இச்சம்பவத்தில் ஈடுபட்டதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த வெள்ளியம்பட்டியை சேர்ந்தவர் சரவணன், 40. வெள்ளாளகுண்டத்தில் பீரோ பட்டறை வைத்துள்ளார். நேற்று காலை, 8:40 மணிக்கு, அரூர் நெடுஞ்சாலையில், குள்ளம்பட்டி, பனங்காடு அருகே, 'டஸ்டர்' காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதியில் காரில் காத்திருந்த மர்ம கும்பல், சரவணன் கார் மீது வேகமாக வந்து இடித்தது. இதில் காயம் அடைந்து சரவணன் காரை நிறுத்தியுள்ளார். உடனே மற்றொரு காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல், சரவணனை நடுரோட்டிலேயே சரமாரியாக வெட்டினர். வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அலறியடித்துச்சென்றனர். சரவணன் உயிரிழந்த நிலையில் அவரது உடலை சாலையோரம் வீசிவிட்டு, மர்ம கும்பல் தப்பியது.
காரிப்பட்டி போலீசார், சரவணன் உடலை கைப்பற்றினர். தடயவியல் நிபுணர்கள், கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. சேலம் டி.ஐ.ஜி., உமா தலைமையில் தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
சரவணனுக்கு மனைவி வனிதா, 35, மகள், மகன் உள்ளனர். பனங்காடு அருகே சரவணன் காரில் சென்றபோது, எக்ஸ்.யு.வி., கார் மோதியது. சரவணன் காரை நிறுத்தினார். அப்போது காரில் இருந்து இறங்கிய, 5க்கும் மேற்பட்டோர், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சரவணன் கார் கதவை திறக்க முயன்றனர். சுதாரித்த அவர், கதவை பூட்டினார். இதனால் கார் கண்ணாடிகளை, மர்ம கும்பல் உடைத்து கதவை திறந்தது. பின் சரவணனை நடுரோட்டில் இழுத்து போட்டு வெட்டி கொலை செய்தனர்.
இதுகுறித்து விசாரித்ததில், 2013ல் சுக்கம்பட்டி அருகே
சரவணன் தம்பி முத்துவை, விஜய் கண்ணன் கொலை செய்தார். இதில் விஜய் கண்ணனுக்கு ஆதரவாக, பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தன் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் ஆனந்தனுக்கும், சரவணனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே, 2023 பிப்., 5 இரவு, கழுத்தறுத்து ஆனந்தன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்த குற்றவாளிகளுக்கு சரவணன் பணம் தருவதாக கூறினார் என தகவல் வெளியானது. இந்த முன்விரோதத்தில் ஆனந்தன் மைத்துனரான, ரவுடி கார்த்தி தலைமையிலான கும்பல், சரவணனை திட்டமிட்டு தீர்த்துக்கட்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடக்கிறது. அதேநேரம் கார்த்தி தலைமையிலானோர் வந்த கார், ஆனந்தனுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. மேலும் கார்த்திக் மீது வீராணம் போலீஸ் ஸ்டேஷனில் கொலை வழக்கு உள்ளது. தவிர, 'சிசிடிவி' காட்சிகளின் பதிவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சேலம் அரசு மருத்துவமனையில், சரவணன் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உறவினர்கள் கூடினர். இதனால் பதற்றம் உருவாக, தெற்கு துணை கமிஷனர் வேல்முருகன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.