/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காணும் பொங்கலையொட்டி களைகட்டிய எருதாட்டம்
/
காணும் பொங்கலையொட்டி களைகட்டிய எருதாட்டம்
ADDED : ஜன 17, 2025 06:17 AM
இடைப்பாடி: பொங்கல் பண்டிகையையொட்டி, இடைப்பாடி அருகே வேம்பனேரி அய்யனாரப்பன் கோவில் பகுதியில் நேற்று எருதாட்டம் நடந்தது. அதில் சுற்றுவட்டாரத்தின், 36 கிராமங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட எருதுகளை, அய்யனாரப்பன் கோவிலை சுற்றி இளைஞர்கள் வலம் வந்தனர்.
ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை, கோழிப்பியூர் பகுதியில் விநாயகர் கோவில் அருகே உள்ள திடலில், 30க்கும் மேற்பட்ட காளைகள் மூலம் எருதாட்டம் நடந்தது. ஓமலுார் அருகே காமலாபுரம் மாரியம்மன் கோவில் திடலில், 50க்கும் மேற்பட்ட காளைகளை, இளைஞர்கள் கயிறு மூலம் பிடித்தபடி, கோவிலை சுற்றி வலம் வந்தனார். அப்போது இளைஞர்கள், பொம்மையை காட்டி சீண்டியபோது, எருதுகள் துள்ளிக்குதித்தன. கூடி நின்று வேடிக்கை பார்த்த மக்கள், ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். அதேபோல் திண்டமங்கலம், ஓலைப்பட்டி, எம்.செட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் எருதாட்டம் களைகட்டியது.
தடைபட்டது
தாரமங்கலம், அமரகுந்தி மாரியம்மன் கோவில் மைதானத்தில் எருதாட்டம் நடந்தது. அதில் மாடு முட்டி சிலர் காயம் அடைய, தேவையின்றி உள்ளே இருந்த இளைஞர்களை, வெளியே செல்ல தொளசம்பட்டி போலீசார் அறிவுறுத்தினர். இளைஞர்கள் மறுத்ததால், சிறிது நேரம் எருதாட்டம் தடைபட்டது. பின் அவர்களை வெளியேற்றி, 50க்கும் மேற்பட்ட காளைகளை, இளைஞர்கள் பிடித்தபடி ஓடினர்.
7 பேர் காயம்
அமரகுந்தியில் நடந்த எருதாட்டத்தில் வினோத், 23. அருண்குமார், 26, வல்லரசு, 25, தங்கமணி, 57, மற்றும் 15 வயது சிறுவன், ஓலைப்பட்டியில் நடந்த எருதாட்டத்தில் ராஜா, 55. பிரேம்குமார், 40, ஆகியோர் காயம் அடைந்து, ஓமலுார் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மஞ்சு விரட்டு
மேச்சேரி அடுத்த புக்கம்பட்டி, குதிரைக்காரனுார், வாழதாசம்பட்டி, மேட்டூர் அடுத்த கோல்நாயக்கன்பட்டி, கொளத்துார் அடுத்த பண்ணவாடி கோவில்களில் மஞ்சு விரட்டு நடந்தது. அதேபோல் வாழப்பாடி, சந்தைப்பேட்டையில் எருதாட்டம் நடந்தது.
ஏட்டு படுகாயம்
ஆத்துார் அருகே கொத்தாம்பாடியை சேர்ந்தவர் பழனிவேல், 49. வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிகிறார். நேற்று பொன்னாரம்பட்டியில் நடந்த எருதாட்ட விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு காளை முட்டியதில் படுகாயம் அடைந்த பழனிவேலு, வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.