ADDED : ஆக 12, 2024 06:28 AM
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி, வண்டி வேடிக்கை கமிட்டி சார்பில், 18வது வண்டி வேடிக்கை நிகழ்ச்சி, தேர்வீதி அருகே நேற்று நடந்தது.
அதில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பல்வேறு தெய்வங்களின் வேடம் அணிந்து பக்தர்கள் வீதி உலா வந்தனர்.குறிப்பாக ஈசன் குழு சார்பில் தட்சன், தாட்சாயினிக்கு பாடம் புகட்டும் ஈசன் வரலாறு; காளை சங்கரன் சார்பில் கங்கை, சிவன், தாட்சாயினி; அப்பு செட்டி தெரு நண்பர் குழு சார்பில் முருகன், அவ்வையார் உரையாடுவது; ஜெயம் கொண்டம் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கமிட்டி சார்பில் காக்கும் காமாட்சி அம்மன் அவதாரம்; வைஸ்ய நண்பர்கள் சார்பில் கற்பக ரட்சாம்பிகை கரு காத்த நாயகி முல்லை வன நாதர் விளக்கும் வரலாறு; ஓம்ஸ்ரீ நவதானிய மயான காளி திருக்கோவில் சார்பில் ஆதிபராசக்தி திருவிளையாடல்; பங்குனி உத்திர விழா கமிட்டி சார்பில் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அலங்காரம் உள்ளிட்ட தெய்வங்கள் வேடம் அணிந்து ஊர்வலமாக வந்தனர். சிறந்த அலங்கார வாகனங்களுக்கு வண்டி வேடிக்கை கமிட்டி தலைவர் நாராயணசாமி, செயலர் சுரேஷ், பொருளாளர் சந்திரன், அறங்காவலர்கள் ஈஸ்வரி, பழனிசாமி உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர். இடைவிடாது பெய்த மழையால், வண்டி வேடிக்கை நிகழ்ச்சி இரவு, 9:40 மணிக்கு பின் நடந்தது.அம்மனுக்கு வளைகாப்புஆஷாடா நவராத்திரி விழா, ஆடி கடைசி ஞாயிறையொட்டி, சேலம் மாவட்டம் ராக்கிப்பட்டி, கோல்டன் நகர் ஜெய துர்கா சண்டிகா பரமேஸ்வரி கோவிலில் நேற்று மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதில் சுமங்கலி பெண்கள், தங்கள் கைகளால் மூலவர் அம்மனுக்கு குங்குமம், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றை, அம்மனுக்கு நலுங்கு வைத்து கையில் கண்ணாடி வளையல்களை அணிவித்து வளைகாப்பு உற்சவத்தை நடத்தினர். பக்தர்களுக்கு மஞ்சள் குங்கும பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.கஞ்சி கலய ஊர்வலம்வேம்படிதாளம், ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் ஆடி கடைசி ஞாயிறான நேற்று, கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.அதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள், வேப்பிலைகளால் அலங்கரிக்கப்பட்ட மண் கலயங்களில் கஞ்சியை நிரப்பி தலையில் சுமந்து, 'ஓம்சக்தி பராசக்தி' கோஷம் முழங்க, முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தனர். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி ஊர்வலம் சென்றதாக, பெண்கள் தெரிவித்தனர்.

