ADDED : மே 08, 2025 01:15 AM
சேலம், சேலம், பனமரத்துப்பட்டி அருகே, ச.ஆ.பெரமனுார் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி தேரோட்டம் நேற்று நடந்தது. அதிகாலையில் மாரியம்மனுக்கு அபி ேஷகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ஏராளமான பெண்கள், மா விளக்கு தட்டுடன் கோவிலை சுற்றி வலம் வந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலையில் முக்கிய வீதிகள் வழியே தேரோட்டம் நடந்தது. அதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமானோர் வடம் பிடித்து தேரை இழுத்துச்சென்று வழிபட்டனர்.
அதேபோல் தாரமங்கலம், கே.ஆர்.தோப்பூர் கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா நடந்தது. காலை, மகா காளியம்மன் கோவிலில் இருந்து அம்மனை அழைக்கும் விழா நடந்தது. தொடர்ந்து, பூசாரி தீ மிதித்து விழாவை தொடங்கி வைத்தார்.
பின் தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து பக்தி பரவசத்துடன் தீ மிதித்தனர்.
அதேபோல் அம்மனுக்கு பொங்கல் வைத்து கோழி, ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் அங்கப்பரதட்சணம் செய்து தரிசித்தனர்.
புன்னை மர சேவை
சித்திரை தேர் திருவிழாவின், 6ம் நாளாக, சங்ககிரி மலை அடிவாரத்தில் உள்ள தங்கும் மண்டபத்தில் சென்னகேசவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களால் அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பின் சென்னசேகவ பெருமாள் உற்சவ மூர்த்தி புன்னை மர சேவையில் அருள்பாலித்தார்.
இச்சேவையில் சுவாமிக்கு தேங்காய், பழங்களை படைத்து வழிபட்ட பக்தர்களுக்கு, சங்ககிரி மளிகை வியாபாரிகள் சங்கம் சார்பில் இலவசமாக பல்வேறு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இரவு ராஜ அலங்காரத்தில் யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தார்.
பால்குட ஊர்வலம்
ஏற்காடு, ஜெரீனாக்காடு பெரிய மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. அலங்கார ஏரி அருகே தொடங்கிய ஊர்வலம், பஸ் ஸ்டாண்ட் வழியே கோவிலை அடைந்தது. பின் பாலால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.
மலர் அலங்காரத்தில் பெரிய மாரியம்மன் காட்சி தந்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.