ADDED : மார் 25, 2024 07:12 AM
ஆத்துார் : தலைவாசல் அருகே ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் 2022ல் தேர் வடிவமைத்து, வெள்ளோட்டம் நடந்தது. 2023ல் தேர் திருவிழா நடந்தது. 2ம் ஆண்டாக, கடந்த, 14ல் தேர் திருவிழா தொடங்கியது. நேற்று காலை, 6:30 மணிக்கு மூலவர் மீது சூரிய ஒளி விழும் காட்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு காமநாதீஸ்வரர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள், வடம் பிடித்து, முக்கிய வீதிகள் வழியே இழுத்துச்சென்று கோவிலை அடைந்தனர். மூலவர் காமநாதீஸ்வரர் வெள்ளி கவசம், மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
வெற்றிவேல் முருகன்
சேலம், பெருமாம்பட்டி, வலியன்காடு வெற்றிவேல் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா, கடந்த, 14ல் தொடங்கியது. நேற்று காலை, மூலவர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் உற்சவருக்கு சிறப்பு அபி ேஷகம் செய்து சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருள செய்தனர்.ஏராளமான பக்தர்கள், 'அரோகரா' கோஷம் முழங்க, தேரை வடம் பிடித்து இழுத்தனர். வலியன்காடு கோவில் முன் தொடங்கிய தேரோட்டம் செம்மண்திட்டு, திருமலைகிரி, தண்ணீர்பந்தல் காடு, பாலிக்காடு உள்ளிட்ட பகுதிகள் வழியே மீண்டும் கோவிலை அடைந்தது. இன்று வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம், அன்னதானம், பால்குடம், காவடி, அலகு எடுத்தல் உள்ளிட்ட ஊர்வலங்கள் நடக்கின்றன. இரவு சூரசம்ஹாரம், வண்டி வேடிக்கை, கரகாட்டம் நடக்கிறது.

