ADDED : செப் 26, 2024 02:44 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு, 15 ஆண்டுக்கு மேலாக திடக்கழிவு மேலாண் திட்டம் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டன. இதனால் தினமும் சேகரிக்கப்படும் குப்பை, காந்தி நகர் மயானத்தின் ஒரு பகுதியில் குவிக்கப்படுகின்றன. இதனால் காந்தி நகர், குறும்பர் தெரு, நத்தமேடு பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
தற்போது நல்லியாம்புதுாரில் திடக்கழிவு மேலாண் திட்டத்தை செயல்படுத்த, புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு துாய்மை இந்தியா திட்டத்தில், 11.50 லட்சம் ரூபாய் மதிப்பில்
ஈரக்கழிவு தீர்வு செயலாக்க கட்டமைப்பு, 17 லட்சம் ரூபாயில் உலர் கழிவு தீர்வு செயலாக்க கட்டமைப்பு பணி மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று, தி.மு.க.,வின் கிழக்கு மாவட்ட
துணை செயலர் சுரேஷ்குமார், பூமிபூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.அதேபோல் மாநில நிதி ஆணைய திட்டத்தில், ரூ.1.40 கோடி ரூபாயில், 11வது வார்டு குறும்பர் தெரு, 12வது வார்டு காந்தி நகர், 5வது வார்டு நல்லியாம்புதுார், ஒன்று, 2வது வார்டு உள்ளிட்ட
இடங்களில் தார்ச்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். தி.மு.க., நகர செயலர் ரவிக்குமார், டவுன் பஞ்சாயத்து தலைவி பரமேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

