ADDED : நவ 03, 2026 04:18 AM
சேலம்: சேலம் மாவட்டம், ஓமலுார் அடுத்த தொளசம்பட்டி, மானத்தாள் கிராமம், உப்பாரப்பட்டி மக்கள் நேற்று திரண்டு வந்து, கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
உப்பாரப்பட்டியில் உள்ள ஐயனாரப்பன், கருப்புசாமி குல தெய்வ கோவில், 2,000 குடும்பங்களுக்கு பாத்தியப்பட்டது. இக்கோவிலில், பூஜை செய்வது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு, 2025 ஜன., 8ல், ஒமலுார் தாசில்தார் தலைமையில் பேச்சு நடத்தி, பூசாரிகள் முருகேசன், ரவி ஆகியோர் சுழற்சி முறையில் மாதம் ஒருவர் பணியாற்ற ஒருமனதமாக முடிவெடுக்கப்பட்டது.
அன்று முதல், பூசாரி முருகேசன், பங்காளிகள் இடையே பிளவுப்படுத்தும் நோக்கில், ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். மேலும், சாமியாடுவது போல, கோவிலுக்கு வரும் பெண்களை பிரம்பால் அடித்து கொடுமைப்படுத்தியும், ஒழுங்கீனமாக செயல்படுவது வேதனையாக உள்ளது.
குறிப்பாக, நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட வேலை பிடுங்கி எறிவதால், கோவிலின் மாண்பும், கடவுளின் புனித தன்மையும் வெகுவாக பாதிக்கும் சூழல் நிலவுகிறது. இது தொடர்பான அனைத்து ஆதாரமும் ஊர்மக்களிடம் உள்ளது. உரிய விசாரணை நடத்தி, முருகேசனை பூசாரி பணியில் இருந்து நீக்கி, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
