/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காங்., கட்சியினர் மத நல்லிணக்க பாதயாத்திரை
/
காங்., கட்சியினர் மத நல்லிணக்க பாதயாத்திரை
ADDED : அக் 06, 2024 03:51 AM
சேலம்: காந்தி ஜெயந்தியையொட்டி, சேலம் மாநகர் மாவட்ட காங்., சார்பில் மத நல்லிணக்க பாதயாத்திரை நேற்று நடந்தது. மாநகர் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.
மாநகராட்சி அலுவலகம், ராஜாஜி சிலை பீட பகுதியில் புறப்பட்ட யாத்திரை, செவ்வாய்ப்பேட்டை பிரதான சாலை வழியே சென்று தேர் நிலையம் அருகே காந்தி சிலை பகுதியில் நிறைவடைந்தது. தொடர்ந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக யாத்திரையின்போது காந்தியடிகளின் அகிம்சை கொள்கைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, துணைத்தலைவர் திருமுருகன், எஸ்.சி., துறை அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் விஜய்ஆனந்த், மாநகர பொதுச்செயலர் கோபி குமரன் உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் ஆத்துாரில், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் காங்., கட்சியினர், 'நமது இந்தியா நமக்கான இந்தியா' எனும் பெயரில் நடைபயணம் மேற்கொண்டனர். தேசிய செயலர், தமிழக பொறுப்பாளர் சூரஜ்ெஹக்டே பங்கேற்றார். உடையார்பாளையத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து நடை பயணம் தொடங்கியது. பஸ் ஸ்டாண்ட், ராணிப்பேட்டை, காமராஜர் சாலை வழியே சென்று பழைய பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது.
தொடர்ந்து சூரஜ் ஹெக்டே பேசுகையில், ''சில கட்சிகள், நீங்கள் என்ன உணவு சாப்பிடுகிறீர்; உடை உடுத்துகிறீர் என பிரிவினை பேசுகின்றனர். நாங்கள் அப்படியல்ல. தேச ஒற்றுமைக்கு ஒன்று கூடி இருக்கிறோம். நாங்கள் அரசியல் செய்ய வரவில்லை. இந்தியாவை காப்பாற்ற வந்துள்ளோம்,'' என்றார்.