ADDED : செப் 25, 2024 01:38 AM
உழவர் திரள் பெருவிழா
வீரபாண்டி, செப். 25-
வீரபாண்டி வட்டார வேளாண் துறை, 'அட்மா' திட்டத்தில், 'கிஸான் கோஷ்தீஷ்' எனும் உழவர் திரள் பெருவிழா, புத்துார் அக்ரஹாரத்தில் நேற்று நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகாயினி தலைமை வகித்தார்.
இதில் உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் குறித்து சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியை ஜெகதாம்பாள், விவசாயிகளுக்கு விளக்கினார். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அனுஷா, உதவி பொறியாளர் சங்கர் குமார், வேளாண் வணிகத்துறை வேளாண் அலுவலர் கிருத்திகா, உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் ஸ்ரீநிறைமதி ஆகியோர், அவரவர் துறை சார்ந்த மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை விளக்கினர்.
இதையொட்டி வேளாண், தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்பு, பட்டு வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை, அட்மா குழு தலைவி வெண்ணிலா திறந்து வைத்தார். இதில் பாரம்பரிய விதைகள், இடு பொருட்கள், நுண்ணுாட்டம், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், உயிர் உரங்கள், டிராக்டர்கள், மினி டிரில்லர்கள், மருந்து தெளிக்கும் கருவிகள், களை எடுக்கும் கருவிகள், இனக்கவர்ச்சி பொறிகள் உள்ளிட்ட நவீன வேளாண் கருவிகள் இடம் பெற்றிருந்தன. 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.