/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏரியில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவால் ஆபத்து
/
ஏரியில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவால் ஆபத்து
ADDED : ஜன 07, 2024 10:33 AM
வீரபாண்டி: சேலம் மாவட்டம் நைனாம்பட்டி ஊராட்சி, ஆட்டையாம்பட்டி டவுன் பஞ்சாயத்தில் உள்ள குடியிருப்புகளின் சாக்கடை கழிவு, முத்தனம்பாளையம் அருகே உள்ள சித்தேரியில் கலக்கிறது. அத்துடன் ஆட்டையாம்பட்டியில் இயங்கும் சாயப்பட்டறைகளின் கழிவும் கலந்து மாசுபடுத்துகிறது. தவிர நைனாம்பட்டி, ஆட்டையாம்பட்டி தனியார் மருத்துவமனைகளின் கழிவையும் கலந்து விடுகின்றனர்.
வயல்களுக்கு இந்த நீரை பயன்படுத்தினால், அதில் கலந்துள்ள, பயன்படுத்திய ஊசி, உடைந்த கண்ணாடி துண்டுகள், விவசாயிகளின் காலை பதம்பார்த்து விடுகின்றன.
தவிர ஏரிக்குள் வளர்ந்துள்ள புற்கள், செடிகளை மேய வரும் கால்நடைகளுக்கும் காயம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகின்றன. கழிவுநீரில் அடித்து வரப்படும் பிளாஸ்டிக் கழிவு, ஏரிக்குள் மிதந்து தேங்கியுள்ளதால், மழைநீர் பூமிக்கடியில் இறங்குவது தடுக்கப்படுகிறது. சுற்றுவட்டாரங்களில் கிணறு, ஆழ்துளை குழாய் கிணறுகளின் நீர்மட்டமும் குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் வரும் கோடையில் நிலத்தடி நீரின்றி, மக்கள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சித்தேரியில் படர்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவை அகற்றுவதோடு, ஏரியை துார்வாரி ஆழப்படுத்தி, அதில் பிளாஸ்டிக் கழிவு கலப்பதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.