/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சம்பள நிலுவையை கண்டித்து டெங்கு பணியாளர்கள் தர்ணா
/
சம்பள நிலுவையை கண்டித்து டெங்கு பணியாளர்கள் தர்ணா
ADDED : நவ 20, 2025 01:59 AM
ஆத்துார், இரு மாத சம்பள நிலுவை மற்றும் சம்பள குறைப்பை கண்டித்து, நகராட்சி அலுவலகம் முன் டெங்கு பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சியில் கொசு ஒழிப்பு பணிக்கு, சென்னையை சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் சார்பில், 29 டெங்கு பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு தினமும், 300 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் இரு மாதங்களாக சம்பளத்தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில், 300 ரூபாய்க்கு பதில் இனி, 250 ரூபாய் என குறைத்து வழங்கப்போவதாக, அந்நிறுவனம் அறிவித்தது.
இதை கண்டித்து நேற்று காலை, 6:30 மணிக்கு நகராட்சி அலுவலகம் முன், டெங்கு கொசு ஒழிப்பு ஒப்பந்த பணியாளர்கள், தர்ணாவில் ஈடுபட்டனர். காலை, 10:30 மணிக்கு, தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவர் அலெக்சாண்டர், பேச்சு நடத்தினார். அப்போது, 'மனுவாக எழுதி கொடுங்கள். அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும்' என அவர் தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து டெங்கு பணியாளர்கள் கூறுகையில், 'நிலுவை சம்பளம் மற்றும் சம்பள குறைப்பு இல்லாமல் மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும் என, நகராட்சி தலைவரிடம் மனு கொடுத்துள்ளோம்' என்றனர்.

