ADDED : ஆக 28, 2024 08:24 AM
இடைப்பாடி: இடைப்பாடி அருகே பெரிய நாச்சியூரில் நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் நடமாடினார். அவரை பார்த்ததும், குரும்பப்பட்டி ஊராட்சி தலைவர் மணி, அங்கிருந்து செல்லும்படி விரட்டிவிட்டார். தொடர்ந்து, 7:30 மணிக்கு அந்த வடமாநில வாலிபர், அதே பகுதியில் சுற்ற, திருட வந்தவரா என்ற சந்தேகத்தில் மணி மீண்டும் விரட்ட முயன்றார். அப்போது அந்த வாலிபர், மணியை தாக்கியுள்ளார்.
இதனால் அப்பகுதி மக்கள், அந்த வாலிபரை பிடித்து கை, கால்களை கட்டி தர்ம அடி கொடுத்தனர். தொடர்ந்து கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 2 மணி நேரமாகியும் போலீசார் வரவில்லை.
மக்கள், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் வர, அவர்களிடம் மக்கள் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அந்த வாலிபரை மீட்ட போலீசார், இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் மணியும், இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
போலீசார் கூறுகையில், 'விசாரணையில் அந்த வாலிபர், ஒடிசாவை சேர்ந்த ராஜாராம், 34, என தெரிந்தது. அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று பேசுகிறார். தொடர்ந்து விசாரிக்கிறோம்' என்றனர்.