ADDED : ஆக 08, 2011 03:04 AM
சேலம்: சேலத்தில் நடந்த நாய்கள் கண்காட்சியில், நூற்றுக்கணக்கான நாய்கள் பங்கேற்றன.
தி சேலம் அக்மெ கென்னல் கிளப் சார்பில், சேலம் சி.எஸ்.ஐ., பள்ளி வளாகத்தில், நேற்று தேசிய அளவிலான நாய் கண்காட்சி நடந்தது. 250க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன. கண்காட்சியில், கென்னல் கிளப் ஆஃப் இந்தியா அனுமதி பெற்ற நடுவர்கள் முகமதுமுனீர் பின்ஜங்க் மற்றும் ஜவீந்தர் சிங் பவார் பங்கேற்றனர். மினியேச்சர் பின்சர், நியோபாலிடன் மேஸ்டிப், சிஹாகுவா, செயின்ட் பெர்னார்ட், ரெடிஸியன் ரிஜ்பேக், பிரஞ்ச் புல்டாக், ஐரிஸ்ஷட்டர், டால்மேஷன், பேஸிட் ஹவுண்ட், டேஸ் ஹோண்ட், ராஜபாளையம், பக், லேபரடார், கோல்டன் ரிட்ரிவர், பாக்ஸர், டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்டு, காக்கர் ஸ்பேனியல், பீகிள், ராட்வீலர், சிப்பிபாறை, சாலூக்கி, புல்டாக், புல்டெரியர், பிக்கினிஸ், பொமரேனியன், கிரேட்டேன், விப்பட் போன்ற, 30 வகையான நாய்கள் கலந்து கொண்டன. ஒவ்வொரு நாயின் குணாதிசயங்கள், எஜமானர்களுக்கு நாய் கீழ்படிதல், நாய் வளர்ப்பு முறை, பராமரிப்பு போன்ற அம்சங்களை நடுவர்கள் கேட்டறிந்தனர். கண்காட்சியில் நாய் வளர்ப்போருக்கான உபகரணங்கள் மற்றும் நாய்களுக்கு தேவையான உணவு பொருட்கள், மருந்து வகைகள் போன்றவை விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் ரத்த வகை கண்டறியும் சோதனை செய்யப்பட்டது. 'காக்கர் ஸ்பேனியல்' நாய்களின் கால் நகங்கள் அழகாக வெட்டப்பட்டு, கண்காட்சிக்கு தயார் செய்யப்பட்டது. 110 கிலோ எடை கொண்ட 'நியோபாலிடன் மேஸ்டிப்' வகையை சேர்ந்த நாய், சிங்கம் போன்ற உருவத்துடன் காண்போரை கவர்ந்தது. சென்ற 2009 முதல் இந்த நாய் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூரை சேர்ந்த சதிஷ் என்பவர் இந்த நாயை பராமரித்து வருகிறார். ஜெர்மன் ஷெப்பாடு வகை நாய்கள் அதிகளவு கலந்து கொண்டன. நாய்களுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, 'பெஸ்ட் இன் சோ', 'ரிசர்வ் பெஸ்ட் இன் சோ' என்ற முறையில் பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியில் ஒவ்வொரு இனத்துக்கும் சிறப்பு பரிசுகளும், சாம்பியன் ஷிப் பரிசுகளும் வழங்கப்பட்டது. கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து நாய்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கண்காட்சியை காண ஏராளமான சிறுவர், சிறுமியர் மற்றும் குழந்தைகள் வந்திருந்தனர்.ஏற்பாடுகளை, தி சேலம் அக்மெ கென்னல் கிளப் தலைவர் விசு காளியப்பா, செயலாளர் கே.சுப்ரமணியன், பொருளாளர் சீனிவாசன், கண்காட்சி செயலாளர் சி.சுப்ரமணியம் ஆகியோர் செய்தனர்.

