/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்தூர் கோட்டையை பாதுகாக்க நடவடிக்கை :புதிதாக கட்டுமான பணி நடத்த அதிரடி தடை
/
ஆத்தூர் கோட்டையை பாதுகாக்க நடவடிக்கை :புதிதாக கட்டுமான பணி நடத்த அதிரடி தடை
ஆத்தூர் கோட்டையை பாதுகாக்க நடவடிக்கை :புதிதாக கட்டுமான பணி நடத்த அதிரடி தடை
ஆத்தூர் கோட்டையை பாதுகாக்க நடவடிக்கை :புதிதாக கட்டுமான பணி நடத்த அதிரடி தடை
ADDED : ஆக 29, 2011 01:03 AM
ஆத்தூர்: ஆத்தூரில், மன்னர் காலத்தில் கட்டிய கோட்டைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அப்பகுதியில், புதிதாக கட்டுமான பணிகள், அடுக்குமாடி கட்டிடம் போன்றவை கட்ட அதிகாரிகள் அதிரடி தடை விதித்துள்ளனர்.
ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரையில், 1வது வார்டில் ஆத்தூர் கோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டையை, பாண்டியர், நாயக்கர், மைசூரு அரசர்களான சிக்கதேவராயர், ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்றவர்கள், தாரமங்கலம், அமரகுத்தி நகரங்களை தலைநகராக கொண்டு கெட்டி முதலி வம்சத்தினர் ஆட்சி செய்து வந்தனர். கி.பி., 1689ல் மைசூரை ஆண்ட சிக்க தேவராயன் இப்பகுதியை பிடித்து, பின் ஹைதர் அலியின் ஆட்சி பகுதியாக மாறியுள்ளது. 1792ல் நடந்த மூன்றாம் மைசூரு போரின்போது, ஆத்தூர் திப்புவிடம் இருந்து ஆங்கிலேயர் வசம் மாறியது. கடந்த, 1824ம் ஆண்டு வரை ஆத்தூர் கோட்டை, ஆங்கிலேயர்களின் ஆயுதங்கள் வைக்கும் கிட்டங்கி தளமாக விளங்கியது. இங்கு, தானிய களஞ்சியங்களும், அரசவைகளும், காவலர் கண்ணுறங்கும் இடம், பாவலர் பண்ணிசைக்கும் இடம், ஆடல் அரங்கம், பாடல் அரங்கம், விருந்து போற்றும் மடப்பள்ளிகள், அறவோர் அகம் மகிழும் அறச்சாலைகள், மண்டபத்தின் நடுவே அரசரும், அரசமாதேவியும் தனித்தனியே நீராடும் நீச்சல்குளம், படை வீரர்களுக்கு ஏற்ப படை வீடுகள், நீதி வழங்கும் மன்றம் போன்ற அடையாள சுவடுகளும் காணப்படுகிறது. மேலும், ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் முதலாவது படைப்பிரிவு காப்பு தலைவர் ஜான்முர்ரே, 1799ம் ஆண்டு மே 6ம் தேதி இறந்தார். அவர், அவரது மனைவி ஆண்மூரே ஆகியோரின் சமாதிகளும் உள்ளது. இந்நிலையில், பழமையும், வரலாற்று பெருமைகளை பறைசாற்றும், 64 ஏக்கர் கொண்ட ஆத்தூர் கோட்டை நிலப்பரப்பு பகுதியில், ஆக்கிரமிப்பு செய்து சிலர் விளை நிலமாகவும், வீடுகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். கோட்டையின் பொலிவை சீர்குலைக்கும் வகையில், அடுக்கு மாடி கட்டிடம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் காரணமாக, நினைவுச் சின்னம் சிதிலமடையும் சூழல் உருவாகியது. தொல்பொருள் புதைவிடம் பாதுகாப்பு சட்டம், 2010ம் ஆண்டின் படி, பழங்கால நினைவு சின்னங்கள், தொல்லியல் இடம் மற்றும் எஞ்சிய பகுதிகளில் புதிதாக திருத்தம் மற்றும் அழித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவர் மீது அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும் என, ஆத்தூர் கோட்டை, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக, தொல்லியல் துறை, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள், நினைவு சின்னம் பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் வசிப்பவர்களிடம், புதிதாக கட்டுமான பணிகள், அடுக்குமாடி வீடுகள் அனுமதியின்றி கட்ட கூடாது என, எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ளனர்.