/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
/
கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
ADDED : நவ 12, 2025 01:22 AM
சேலம், உதவித்தொகையை உயர்த்தி தரக்கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், சேலம் மாவட்ட தலைவர் அமலாராணி தலைமையில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள், நாட்டாண்மை கழக கட்டடத்தில் இருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் நுழைவாயிலில் காலை, 10:30 மணிக்கு அமர்ந்து, முற்றுகை போராட்டம் நடத்தினர். டி.ஆர்.ஓ., ரவிக்குமார் பேச்சு நடத்தினார்.
அப்போது, 'தற்போதைய விலைவாசியை கருத்தில் கொண்டு, தமிழக அரசு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் பட்டா வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் ரேஷன் கார்டுகளை ஏ.ஏ.ஒய்., கார்டுகளாக மாற்றி மாதம், 35 கிலோ இலவச அரிசி வழங்க வேண்டும்' என வலியுறுத்தினர்.
அதற்கு ரவிக்குமார், 'உரிய முறையில் மனு கொடுங்கள். அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறிவிட்டு, அலுவலகத்துக்குள் சென்றார். ஆனால் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து, 11:30 மணிக்கு, மீண்டும் ரவிக்குமார் பேச்சு நடத்தினார்.
அப்போது, 'கலெக்டர் வந்து சொன்னால் தான் கலைந்து செல்வோம்' என கூறினர். மேலும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், 37 பெண்கள் உள்பட, 89 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றி அருகே உள்ள மண்டபத்துக்கு அழைத்துச்சென்றனர். மாலையில் விடுவித்தனர்.
அதேபோல், மேட்டூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர். அதில் சேலம் மாவட்ட பொருளாளர் ஜான் பெர்னாண்டஸ், துணைத்தலைவர் உமாகாந்த், நங்கவள்ளி ஒன்றிய செயலர் நாகேந்திரன் உள்பட பலரும், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட, 40 பெண்கள் உள்பட, 107 பேரை, மேட்டூர் போலீசார் கைது செய்தனர்.

