/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.500க்கு சிலிண்டர் வழங்கப்படும் தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
/
ரூ.500க்கு சிலிண்டர் வழங்கப்படும் தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
ரூ.500க்கு சிலிண்டர் வழங்கப்படும் தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
ரூ.500க்கு சிலிண்டர் வழங்கப்படும் தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
ADDED : மார் 27, 2024 04:53 PM
சேலம்: தி.மு.க., தலைமையிலான, 'இண்டியா' கூட்டணியில், சேலம் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி, வீரபாண்டி ஒன்றியம் பெருமாம்பட்டியில் நேற்று வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவருக்கு, மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து செல்வகணபதி பேசியதாவது: தமிழகத்தில், தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், எண்ணற்ற சாதனை திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் மகளிர் உரிமைத்தொகை, மாணவர்களுக்கு உதவி தொகை, மகளிருக்கு இலவச பஸ் வசதி, காலை உணவு திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மத்தியில், 'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வரும்போது நாடு முழுதும் மகளிருக்கு உரிமைத்தொகை, 2,000 ரூபாய் வழங்கப்படும். எப்போதும் மகளிருக்கு, தி.மு.க., துணை நிற்கும். மோடி ஆட்சியில் காஸ் விலை, 1,200 ரூபாயாக உயர்ந்தது. அந்த விலையை குறைத்து ஒரு சிலிண்டர், 500க்கு வழங்கப்படும். லிட்டர் பெட்ரோல், 75 ரூபாய், டீசல், 65 ரூபாய் கிடைக்கும். ஊரக வேலை வளர்ச்சி திட்டத்துக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் அதை தற்போது, 40,000 கோடி ரூபாயாக குறைத்துள்ளனர்.
மோடி ஆட்சியில் அரிசி விலை சிப்பத்துக்கு, 400 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் ஒரு பவுன், 50,000 ரூபாயாக உயர்ந்துள்ளதால் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசுடன், 10 ஆண்டு கூட்டணியில் இருந்த, அ.தி.மு.க., தற்போது நாடகம் ஆடுகிறது. பா.ம.க.,வை வேடந்தாங்கல் பறவை என்கிறார் அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., ஆனால், 10.5 சதவீத இடஒதுக்கீட்டில் ஏமாற்றி விட்டதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டுகிறார்.
10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மோடி, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்தபோதும், வீடுகள் தண்ணீரில் மூழ்கியபோதும் தமிழகத்துக்கு வரவில்லை. தற்போது தேர்தல் வந்ததால், 10 முறை தமிழகத்துக்கு வருகிறார். அதனால் நீங்கள், உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுப்போட்டு என்னை வெற்றி பெற செய்தால் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உங்களுடன் இருந்து, உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், ஒன்றிய செயலர் வெண்ணிலா சேகர், மாணிக்கம், காங்., கட்சியின், இரும்பாலை சந்திரன், இ.கம்யூ., மாவட்ட செயலர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

