/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தரையில் உருண்ட தி.மு.க., கவுன்சிலர் 'கூலாக' கூட்டத்தை முடித்தார் தலைவி ஆத்துார் நகராட்சியில் ஒரே கூத்து
/
தரையில் உருண்ட தி.மு.க., கவுன்சிலர் 'கூலாக' கூட்டத்தை முடித்தார் தலைவி ஆத்துார் நகராட்சியில் ஒரே கூத்து
தரையில் உருண்ட தி.மு.க., கவுன்சிலர் 'கூலாக' கூட்டத்தை முடித்தார் தலைவி ஆத்துார் நகராட்சியில் ஒரே கூத்து
தரையில் உருண்ட தி.மு.க., கவுன்சிலர் 'கூலாக' கூட்டத்தை முடித்தார் தலைவி ஆத்துார் நகராட்சியில் ஒரே கூத்து
ADDED : ஜூலை 31, 2024 11:43 PM

ஆத்துார்:சேலம் மாவட்டம், ஆத்துார் நகராட்சி கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு, 5வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் தங்கவேல், கருப்பு சட்டை அணிந்து வந்தார். அறைக்குள் நுழையும் போதே, 'முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியை கண்டித்து போராட்டம் நடத்தும் அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக தி.மு.க., நகர செயலர் பாலசுப்ரமணியம் உள்ளதை கூறினால் என்னை எட்டி உதைக்கின்றனர். தீர்மானத்தை நிறைவேற்ற விடமாட்டேன்' என, கூச்சலிட்டபடி வந்தார்.
தி.மு.க.,வைச் சேர்ந்த நகராட்சி தலைவி நிர்மலாபபிதா தலைமையில் கூட்டம் துவங்கியதும், நகராட்சி பணியாளர், 'மைக்'கில் தீர்மானங்களை வாசித்தார். உடனே தங்கவேல், பாட்டிலில் எடுத்து வந்த பெட்ரோலை, தன் உடலில் ஊற்ற முயன்றார். சக கவுன்சிலர்கள் அந்த பாட்டிலை பறித்தனர். பின், 'தீர்மானங்கள் வாசிக்கக்கூடாது' என, மைக் ஒயரை பிடுங்கினார்.
இருந்தும், தொடர்ந்து தீர்மானங்கள் வாசித்தபோது, அதன் நகலை பறித்து, கிழித்து வீசினார். தொடர்ந்து அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட அவர், திடீரென தரையில் படுத்து உருண்டு புரண்டு ரகளையில் ஈடுபட்டார்.
மற்ற கவுன்சிலர்கள், 'ஆளுங்கட்சி கவுன்சிலராக இருந்து இப்படி செய்யலாமா?' என்றனர். உடனே எழுந்த அவர் தலைவியிடம், 'முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியை கண்டித்தும், தி.மு.க., ஆட்சியை அவதுாறாகவும், ஒருமையிலும் பேசி அ.தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர்.
'ஆனால், அ.தி.மு.க., நகர செயலர் மோகன் மனைவி உமாசங்கரி கவுன்சிலராக உள்ள, 11வது வார்டுக்கு, எதற்கு, 41.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வை விட, அ.தி.மு.க., கவுன்சிலர் வார்டுகளுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளீர்கள். இத்தீர்மானத்தை நிறைவேற்றினால் இங்கேயே தீக்குளித்து முதல்வர் ஸ்டாலினுக்காக உயிரை விடுவேன். இப்போது எதிர்ப்பு தெரிவித்த நிலையில், என் உயிருக்கு இனி பாதுகாப்பு இல்லை. அப்படி ஏதேனும் நேரிட்டால் தி.மு.க., நகர செயலர், நகராட்சி தலைவி தான் காரணம்' என, ஆவேசம் காட்டினார்.
இதை எதுவும் பொருட்படுத்தாமல் நிர்மலாபபிதா, '62 தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்படுகின்றன' எனக்கூறி, கூட்டத்தை முடித்து அங்கிருந்து வெளியேறினார். தங்கவேல் ரகளையால், தங்கள் வார்டு பிரச்னைகளை பேச முடியாமல் போனதாக, மற்ற கவுன்சிலர்கள் புலம்பியபடி நடையை கட்டினர்.
தங்கவேல் கூறியதாவது:
தி.மு.க., நகர செயலர் பாலசுப்ரமணியம் மருமகள் தான் நிர்மலாபபிதா. உள்ளார். இவர்கள், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக உள்ளனர். தலைவி அறையில் நான் பேசிக் கொண்டிருந்த போது, பாலசுப்ரமணியம் என்னை எட்டி உதைத்ததில் கீழே விழுந்துவிட்டேன். அவர், 'அ.தி.மு.க., நகர செயலர் என் நண்பர் என்பதால் நிதி ஒதுக்கீடு செய்வேன்' என்கிறார். 'நீ செத்தா சாவு. எனக்கு நண்பன் தான் முக்கியம்' என, சொல்கிறார். தி.மு.க., நகர செயலருக்கு எதிராக என் வார்டு மக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாலசுப்ரமணியம் கூறுகையில், ''மக்கள் கோரிக்கைபடி, 11வது வார்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. தங்கவேல் என் மீது பொய் தகவல் கூறுகிறார்,'' என்றார்.