/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.,'
/
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.,'
ADDED : ஜூலை 06, 2025 01:59 AM
தேன்கனிக்கோட்டை, ''தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த, விவசாயிகளுக்கான தேர்தல் அறிக்கையில், 110ல், 10 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி உள்ளார்,'' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் நடந்த வீரவணக்க பேரணியில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு கொடுக்கும் எந்த மானியமும் விவசாயிகளுக்கு வருவதில்லை. தெலுங்கானாவை போல் ஆண்டுதோறும் ஏக்கருக்கு, 20,000 ரூபாயை விவசாயிகளின் வங்கி கணக்கில், உற்பத்தி மானியமாக வரவு வைக்க வேண்டும். மத்திய அரசு உர மானியமாக, 8 நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும், 2.25 லட்சம் கோடி ரூபாய் வழங்குகிறது.
எங்களுக்கு தேவையான உரத்தை, நாங்களே தயாரித்து கொள்கிறோம். 2.25 லட்சம் கோடி ரூபாயை மானியமாக கொடுத்து, உரம் தயாரித்து தர வேண்டாம். விவசாயிகள் வங்கி கணக்கிற்கு அனைத்து உற்பத்தி மானியமும் வரவு வைக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள், விவசாயிகளை பந்தாடுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், விவசாயிகளுக்கு தேர்தல் அறிக்கையில், 110 வாக்குறுதிகளை கொடுத்தார். அதில், 10 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி உள்ளார்.
விவசாயிகள் வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் வரும் தேர்தலில், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உரிய பாடம் புகட்டும்.
தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், விவசாயிகளுக்காக செயல்படாமல், அவர் வாங்கும் கமிஷனுக்காக, கம்பெனிகளுக்காக செயல்படுகிறார்.
'மா' விவசாயிகள் பாதிக்கப்பட்டோம். இதற்கு முன் தர்ப்பூசணி, நெல் விவசாயிகள் பாதிக்கப்பட்டோம். கடந்த, 5 ஆண்டுகளாக, விவசாயிகள் பயிர் வாரியாக பாதிக்கப்பட்ட போதும், அமைச்சர் பன்னீர்செல்வம் விவசாயிகளை சந்திக்கவில்லை, விவசாய சங்க தலைவர்களை அழைத்து பேசவில்லை.
தமிழகத்தில், 'மா' விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 50,000 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.