/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளி, கல்லூரி நிர்வாகிகளை மிரட்டி பஸ், வேன்களை எடுத்து சென்ற தி.மு.க., நிர்வாகிகள்: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
/
பள்ளி, கல்லூரி நிர்வாகிகளை மிரட்டி பஸ், வேன்களை எடுத்து சென்ற தி.மு.க., நிர்வாகிகள்: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
பள்ளி, கல்லூரி நிர்வாகிகளை மிரட்டி பஸ், வேன்களை எடுத்து சென்ற தி.மு.க., நிர்வாகிகள்: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
பள்ளி, கல்லூரி நிர்வாகிகளை மிரட்டி பஸ், வேன்களை எடுத்து சென்ற தி.மு.க., நிர்வாகிகள்: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
ADDED : ஜன 22, 2024 12:34 PM
மேட்டூர்,: ''மாநாட்டுக்கு அழைத்து செல்வதற்காக, மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லுாரி நிர்வாகிகளை மிரட்டி பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை எடுத்து சென்று, இளைஞர் அணி மாநாட்டில் பங்கேற்க கட்சியினரை, தி.மு.க., நிர்வாகிகள் அழைத்து சென்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது,'' என, முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.
சேலம் மாவட்டம் மேட்டூர், மேச்சேரி, மல்லிகுந்தத்தில் நடந்த கட்சி பிரமுகர் திருமணவிழாவில் முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., பங்கேற்றார். முன்னதாக மல்லிகுந்தம் பஸ் ஸ்டாப் அருகே, கட்சி கொடியை ஏற்றி வைத்து அவர் பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில்தான் தமிழகம் வளர்ந்து தேசிய அளவில் முதலிடம் பெற்றது. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த, 7.5 சதவீத இடஒதுக்கீட்டில், 2,160 மாணவ, மாணவியருக்கு மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்தது.
சேலம் மாவட்டம் எப்போதுமே அ.தி.மு.க., கோட்டையாக உள்ளது. அதில், எந்த கட்சியினரும் நுழைய முடியாது. அதனால்தான் இளைஞர் அணி மாநாட்டை இரு முறை தள்ளி வைத்து மூன்றாவது முறையாக நடத்துகிறது தி.மு.க,.
சேலம் மாவட்டத்தில் வறண்ட பகுதிகளில் பயிர் சாகுபடி செய்வதற்காக மேட்டூர் அணை உபரி நீரை நிரப்பும், 100 ஏரி பாசன திட்டத்தை, தி.மு.க., அரசு கிடப்பில் போட்டு விட்டது. அதுபோல பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்ட மடிகணினி திட்டத்தையும் முடக்கி விட்டது.
தேர்தல் சமயத்தில், 500 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறிய விடியா அரசு சில வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது.
மேலும், மாநாட்டுக்கு அழைத்து செல்வதற்காக, மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லுாரி நிர்வாகிகளை மிரட்டி பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை எடுத்து சென்று, இளைஞர் அணி மாநாட்டில் பங்கேற்க கட்சியினரை, தி.மு.க., நிர்வாகிகள் அழைத்து சென்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மேச்சேரி, சாத்தப்பாடி ஊராட்சி, வேடன்கரடு திட்டு பகுதியில் கட்சி கொடியேற்றி பழனிசாமி பேசினார்.
ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன், அ.தி.மு.க., மேச்சேரி ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், செல்வம், பேரூர் செயலாளர் குமார், மகளிர் அணி மாவட்ட செயலாளர் லலிதா, கழக ஜெ., பேரவை துணை செயலாளர் கலையரசன் உள்பட அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.