/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாயை கடித்து கொன்று தோல் உரிப்பு; சிறுத்தை என கிராம மக்கள் கலக்கம்
/
நாயை கடித்து கொன்று தோல் உரிப்பு; சிறுத்தை என கிராம மக்கள் கலக்கம்
நாயை கடித்து கொன்று தோல் உரிப்பு; சிறுத்தை என கிராம மக்கள் கலக்கம்
நாயை கடித்து கொன்று தோல் உரிப்பு; சிறுத்தை என கிராம மக்கள் கலக்கம்
ADDED : ஜூன் 01, 2024 06:34 AM
ஓமலுார் : வீட்டில் கட்டப்பட்டிருந்த நாயை, மர்ம விலங்கு கடித்து அதன் தோலை உரித்துள்ளதால் அந்த விலங்கு சிறுத்தையாக இருக்கும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா டேனிஷ்பேட்டை வன சரகத்துக்குட்பட்ட எலத்துார் காப்புக்காடு அடிவார பகுதியில் மூக்கனுார், எலத்துார், தொட்டியனுார், குண்டுக்கல் உள்பட, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அங்கு விவசாயம் பிரதான தொழில் என்பதால் அப்பகுதி மக்கள், ஆடு, மாடுகளை, காப்புக்காட்டில் மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வர். 2023 ஆகஸ்டில், எலத்துார் காப்புக்காட்டில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும், அதனால் மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகளை கடித்து உணவாக எடுத்துக்கொள்வதாகவும், அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
டேனிஷ்பேட்டை வனத்துறையினர், கேமரா பொருத்தி கண்காணிப்பில் ஈடுபட்டும் சிறுத்தை சிக்கவில்லை. அதே ஆண்டு செப்., 25ல், பண்டத்துக்காரன் கொட்டாய் அருகே உள்ள கரட்டில் சிறுத்தை நடமாட்டத்தை, அப்பகுதியில் வேலை செய்த தோட்ட தொழிலாளர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறை சார்பில் ஆடுடன் கூடிய பிரத்யேக கூண்டு வைக்கப்பட்டது. அப்போதும் சிறுத்தை சிக்கவில்லை.தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் மட்டும் ஈடுபட்டு வந்தனர். அதேநேரம் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் அடிக்கடி ஆடுகள் காணாமல் போவது தொடர்ந்தது. சில நாட்களுக்கு முன் மேச்சேரி அருகே வெள்ளார், அரசமரத்துார் காட்டுவளவில் ஒரு மாட்டை மர்ம விலங்கு கடித்தது. அது சிறுத்தையாக இருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்தனர்.இரவில் வெளியே வராதீர்!
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, தீவட்டிப்பட்டி அடுத்த எலத்துார், காமராஜர் நகரில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் வீட்டில் கட்டப்பட்டிருந்த நாய் கடிக்கப்பட்டு, அதன் தோல் உரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. ஏற்கனவே சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட பகுதியில் மீண்டும் சிறுத்தை வந்திருக்கலாம் என, கிராம மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். டேனிஷ்பேட்டை ரேஞ்சர் தங்கராஜ் தலைமையில் வனத்துறையினர், இறந்த நாயை பார்வையிட்டனர். மேலும் அப்பகுதியில் காலடி தடங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து தங்கராஜ் கூறுகையில், ''இறந்த நாயின் உடலில் பட்ட பல் அளவு, அங்கு சிதறியிருந்த மர்ம விலங்கின் முடிகள் கண்டெடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இரவில் மக்கள் வெளியே வரவோ, படுக்கவோ வேண்டாம்,'' என்றார்.