தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/கண் பிரச்னைக்கு சுயமாக மருந்து வாங்கி பயன்படுத்தாதீர்! 'காலைக்கதிர்' நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

கண் பிரச்னைக்கு சுயமாக மருந்து வாங்கி பயன்படுத்தாதீர்! 'காலைக்கதிர்' நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

கண் பிரச்னைக்கு சுயமாக மருந்து வாங்கி பயன்படுத்தாதீர்! 'காலைக்கதிர்' நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்


UPDATED : அக் 31, 2026 05:53 AM

ADDED : அக் 31, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 05:53 AM ADDED : அக் 31, 2026 05:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்:'கண்களில் தொடர் எரிச்சல், வறட்சி, அலர்ஜி, சிவப்பு நிறம் அல்லது துாசு விழுந்தால், சுயமாக மருந்து கடைகளில் சொட்டு மருந்துகளை வாங்கி பயன்படுத்துவது தவறு. இது சில நேரங்களில் கருவிழியை நிரந்தரமாக பாதித்துவிடும்' என, 'காலைக்கதிர்' விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவர் தெரிவித்தார்.

உலக பார்வை தினத்தை ஒட்டி, 'காலைக்கதிர்' நாளிதழ், 'தி ஐ பவுண்டேஷன்' கண் மருத்துவமனை இணைந்து, சேலம், காகாபாளையம், நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில், 'கண்களை நேசி' விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கண் பரிசோதனை முகாமை நேற்று நடத்தின. 'காலைக்கதிர்' பொது மேலாளர் ஜெரால்டு வரவேற்றார்.

'தி ஐ பவுண்டேஷன்' பொது மேலாளர் செந்தில்குமார், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:

கொரோனா பெருந்தொற்றுக்கு பின், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, அனைவரும் கைபேசி, மடிக்கணினிகளை அதிக நேரம் பயன்படுத்துகின்றனர். வீட்டுக்குள் அதிக நேரம் இருப்பதாலும், வெளிப்புற விளையாட்டுகள் குறைந்ததாலும், பார்வை குறைபாடுகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க ஒவ்வொரு, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 அடி துாரத்தில் உள்ள ஒரு பொருளை, 20 வினாடிகள் பார்க்கும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது, கண் தசைகளுக்கு ஓய்வு அளித்து, பார்வையை தெளிவாக்குகிறது.

பொதுவாக, 18 முதல், 20 வயதை எட்டும் வரை, கண்களின் கருவிழி வளர்ந்துகொண்டே இருக்கும் என்பதால், அந்த வயது வரை கண்ணாடியின், 'பவர்' மாறிக்கொண்டே இருக்கும். இந்த மாறுபாட்டை கட்டுப்படுத்த, தற்போது, 'மயோவிஷன் கிளாசஸ்' எனும் நவீன கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பார்வை திறன், மேலும் குறைவதை தடுக்கின்றன. 20 வயதுக்கு மேல், கருவிழி வளர்ச்சி முழுமையடைந்த பின், தொடர்ச்சியாக ஓராண்டு, பார்வை ஒரே நிலையில் இருந்தால் மட்டுமே, 'லேசிக்' போன்ற அறுவை சிகிச்சைகளை செய்து நிரந்தரமாக கண்ணாடிகளை தவிர்க்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மருத்துவர் பானுபவித்ரா பேசியதாவது:

கிட்டப்பார்வை அல்லது துாரப்பார்வை உள்ளவர்களுக்கு தொடக்கத்தில் கண்ணாடிகளே பரிந்துரைக்கப்படுகின்றன. சிலர், கான்டாக்ட் லென்ஸ்களை விரும்புகின்றனர். இவற்றை தினமும் துாங்குவதற்கு முன், கட்டாயம் கழற்றிட வேண்டும். லென்ஸை கழற்றாமல் துாங்குவது, கைகளை சுத்தப்படுத்தாமல் பயன்படுத்துவது, லென்ஸை சுத்தப்படுத்த சாதாரண குழாய் நீரை பயன்படுத்துவது போன்றவை கண்களில் நோய் தொற்றுகளை ஏற்படுத்தும்.

கண்களில் தொடர் எரிச்சல், வறட்சி, அலர்ஜி, சிவப்பு நிறம் அல்லது துாசு விழுந்தால், சுயமாக மருந்து கடைகளில் சொட்டு மருந்துகளை வாங்கி பயன்படுத்துவது தவறு. இது சில நேரங்களில் கருவிழியை நிரந்தரமாக பாதித்துவிடும். இத்தகைய அறிகுறி ஏற்பட்டால் சாதாரண நீரில், 10 நிமிடம் கண்களை கழுவ வேண்டும். அப்படியும் சரியாகவில்லை என்றால், உடனே கண் மருத்துவரை அணுகி பரிசோதித்து, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

'பார்வை பாதுகாப்பு அவசியம்'

முன்னதாக, நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரி முதல்வர் விசாகவேல்

பேசியதாவது:

அனைவருக்கும் ஒரு நல்ல, 'பாசிட்டிவ்' மனநிலை அவசியம். 'நெகடிவ்' ஆக பேசுபவர்களை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக மாணவர்களுக்கு, 'செல்ப் டிசிப்ளின்' மற்றும் 'செல்ப் லேர்னிங்' மிக அவசியம். எந்த துறையாக இருந்தாலும், திறமையை வளர்த்துக்கொண்டால், ஒருநாள் பெரிய இடத்துக்கு வர முடியும். ஜப்பானிஷ், ஜெர்மன் மொழிகளை கற்றுக்கொண்டால், உலக அளவில் வேலைவாய்ப்பை பெற முடியும். பல வேலைவாய்ப்புகளுக்கு, கண்பார்வை குறைபாடு இருந்தால் தகுதியிழக்க நேரிடும் என்பதால், கண்ணை பாதுகாப்பதும் அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நாலெட்ஜ் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர் சேர்க்கை இயக்குனர் சண்முகசுந்தரம், 'காலைக்கதிர்' ஆசிரியர் ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து கண் பரிசோதனை முகாமில், ஏராளமான மாணவ, மாணவியர் பயன் பெற்றனர்.

Image 1638388

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us