/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு பள்ளி வளாகத்தில் 'குடி'மகன்கள் கும்மாளம்
/
அரசு பள்ளி வளாகத்தில் 'குடி'மகன்கள் கும்மாளம்
ADDED : மே 19, 2024 02:34 AM
ஆத்துார்: ஆத்துார் ஊரக போலீஸ் ஸ்டேஷன் எதிரே, 20 ஏக்கரில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு, 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அதில், 5 ஏக்கருக்கு மேல் விளையாட்டு மைதானம் உள்ளது. அங்கு மாணவர்கள், இளைஞர்கள், தினமும் காலை, மாலையில் உடற்பயிற்சி, நடைபயிற்சியில் ஈடுபடுகின்றனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் காலை முதல் மாலை வரை, போலீஸ், ராணுவம் உள்ளிட்ட பணிகளுக்கு முயற்சிப்போர், உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் பகல் மட்டுமின்றி இரவிலும், 'குடி'மகன்கள், பள்ளி வளாகத்தை திறந்தவெளி, 'பார்' ஆக மாற்றியுள்ளனர். அப்படி மது அருந்துவோர், காலி மதுபாட்டில்களை அங்கேயே வீசி விடுவதோடு உடைத்தும் விடுகின்றனர். இதனால் நடை பயிற்சி, உடற்பயிற்சிக்கு வருவோர் கால்களில், உடைந்த மதுபாட்டில்கள் குத்தி ரத்த காயம் ஏற்படுகிறது.
அதேபோல் நரசிங்கபுரம் தடுப்பணை பகுதிகளில் மது அருந்துவோர், தண்ணீர் வழிந்தோடும் பாதைகளில் காலி மதுபாட்டில்களை வீசி உடைத்து வருகின்றனர். அந்த வழியே தென்னங்குடிபாளையத்துக்கு செல்லும் மக்கள், உடைந்த மதுபாட்டில்களை மிதித்து காயம் ஏற்படுவது தொடர்கிறது.
இதுகுறித்து ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் கூறுகையில், ''அரசு பள்ளி வளாகத்தில் மது அருந்துவோர் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் காலி மதுபாட்டில் உடைப்பவர்களை கண்டறிந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

