ADDED : அக் 05, 2025 01:15 AM
ஏற்காடு சென்னையில் உள்ள, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும், 14 பேர், நேற்று முன்தினம் ஏற்காடுக்கு சுற்றுலா வந்தனர். சரவணன் என்பவருக்கு சொந்தமான வேனை, வேலுார் மாவட்டம் வளத்துாரை சேர்ந்த தமிழ்மாறன், 59, ஓட்டினார்.
அவர்கள் ஏற்காட்டை சுற்றிப்பார்த்துவிட்டு, நேற்று மதியம், 2:00 மணிக்கு, ஏற்காடு, குப்பனுார் மலைப்பாதையில் சென்னைக்கு புறப்பட்டனர். 2:30க்கு, வாழவந்தி அடுத்த ஆத்துப்பாலம் அருகே, இறக்கமான சாலையில் சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த வேன், வேகமாக சென்று, முன்புறம், 'ஆக்டிவா' மொபட்டில் சென்ற, வாழவந்தியை சேர்ந்த ராஜமாணிக்கம், 55, மீது மோதியது.
இதில் ராஜமாணிக்கம், 50 மீ., இழுத்துச்செல்லப்பட்டு, துாக்கி வீசப்பட்டார். மக்கள், அவரை மீட்டு, வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் உயிரிழந்தார். ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.