ADDED : செப் 25, 2024 01:38 AM
பெத்தநாயக்கன்பாளையம்:சேலம் மாவட்டம் மேல்நாடு ஊராட்சி, மோதுார் நடுவீதியை சேர்ந்தவர் ஆசைதம்பி, 45. கருமந்துறை மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்தார். இவருக்கு மனைவி ராசம்மாள், இரு மகன்கள், மகள் உள்ளனர்.
இவரின் மனைவி நேற்று முன்தினம், ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். மாலை, 6:00 மணிக்கு வீட்டில் ஆசைதம்பி மட்டும் தனியாக இருந்தார். அப்போது வந்த மர்ம நபர்கள், ஆசைதம்பி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர்.
இரவு, 9:00 மணிக்கு வீட்டுக்கு வந்த ராசம்மாள், கணவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். கரியகோவில் போலீசார், உடலை கைப்பற்றி கொலை வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'ஆசைதம்பிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் குடிநீர் குழாய் போடுவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. அவரை கொலை செய்தவர்கள் யார் என விசாரணை நடக்கிறது' என்றனர்.