/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கால்நடைகளுக்கு விவசாயிகள் நன்றி; மாட்டுப்பொங்கல் கோலாகலம்
/
கால்நடைகளுக்கு விவசாயிகள் நன்றி; மாட்டுப்பொங்கல் கோலாகலம்
கால்நடைகளுக்கு விவசாயிகள் நன்றி; மாட்டுப்பொங்கல் கோலாகலம்
கால்நடைகளுக்கு விவசாயிகள் நன்றி; மாட்டுப்பொங்கல் கோலாகலம்
ADDED : ஜன 16, 2025 06:55 AM
வீரபாண்டி: மாட்டு பொங்கலையொட்டி, சேலம் அருகே நெய்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, அரியானுார், வீரபாண்டி, பைரோஜி, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் வளர்க்கும் ஆடு மாடுகளை நேற்று குளிப்பாட்டி, வண்ண பொடிகளை அவற்றின் உடல்கள் முழுதும் பூசி, கொம்புகளை அலங்கரித்தனர். பின் மலர் மாலைகள் சூட்டி வயல் நடுவே பானை வைத்து பொங்கல் சமைத்து மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும்படி அவைகளுக்கு முதலில் பொங்கலை ஊட்டினர். பின் அனைவரும், செல்லப்பிராணிகளான ஆடு, மாடு, கோழி, நாய்களுக்கும் பூஜை செய்து அவற்றுக்கு பிடித்த உணவுகளை கொடுத்து, ஒருநாள் எந்த வேலையும் வாங்காமல் ஓய்வெடுக்க வைத்து நன்றி செலுத்தினர்.
அதேபோல் ஏற்காடு, அடிவாரம், விநாயகம்பட்டியில் வன்னியர் சங்கம் சார்பில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. அதில் கால்நடைகளுக்கு சீர்வரிசை கொண்டு வந்து, மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. பின் விவசாய நிலத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும் தீபாராதனை காட்டி வணங்கினர். பின் கால்நடைகளுக்கு உணவு வழங்கி மகழ்ந்தனர். இதுகுறித்து வன்னியர் சங்க மாநில செயலர் கார்த்தி கூறுகையில், ''விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு இந்த ஆண்டாவது உரிய விலை கிடைக்க வேண்டும். விலை நிர்ணயம் செய்ய அரசு முன்வர வேண்டும்,'' என்றார்.
ஏற்காடு, ஜெரீனாக்காட்டில் உள்ள ஆர்.டி.எஸ்., மைதானத்தில் அந்த கிராம இளைஞர்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். தொடர்ந்து வழுக்கு மரம் ஏறுதல், உறி அடித்தல் போட்டிகள் நடத்தினர். ஏராளமானோர் விளையாடி மகிழ்ந்தனர்.
மாட்டு வண்டி ஓட்டிய எம்.எல்.ஏ.,
தாரமங்கலம் அருகே அமரகுந்தியில், மாடு, காளையை குளிப்பாட்டி வண்ணப்பொடிகளை துாவி அலங்கரித்தனர். தொடர்ந்து, அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஓமலுார் எம்.எல்.ஏ., மணி உள்ளிட்ட கட்சியினர், பொங்கல் வைத்து வழிபட்டு காளைகளுக்கு கொடுத்தார். இதில் ஜல்லிக்கட்டு, நாட்டு மாடு என, 50க்கும் மேற்பட்ட மாடுகள் இருந்தன. மாடுகளை வணங்கி, எம்.எல்.ஏ., இரு மாடுகள் பூட்டிய வண்டியில் சவாரி செய்து மகிழ்ந்தார்.

