/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
1,400 ஏக்கர் நிலம் மீண்டும் கிடைக்க விவசாயிகள் வழிபாடு
/
1,400 ஏக்கர் நிலம் மீண்டும் கிடைக்க விவசாயிகள் வழிபாடு
1,400 ஏக்கர் நிலம் மீண்டும் கிடைக்க விவசாயிகள் வழிபாடு
1,400 ஏக்கர் நிலம் மீண்டும் கிடைக்க விவசாயிகள் வழிபாடு
ADDED : ஜூலை 18, 2025 01:25 AM
பனமரத்துப்பட்டி, சேலம் மாநகர் மக்களின் குடிநீர் தேவைக்கு, ஜருகுமலை அடிவாரத்தில், 1911ல், பனமரத்துப்பட்டி ஏரியை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். அப்போது, ஏரி உருவாக்க கோவிந்தவாடி, காளியூர், அத்திப்பட்டி, சூரியூர் உள்ளிட்ட 7 ஊர்கள் காலி செய்யப்பட்டன.
சேலத்திற்கு காவிரி குடிநீர் வந்த பின், பனமரத்துப்பட்டி ஏரி குடிநீர் திட்டம் கைவிடப்பட்டது. ஏரி வறண்ட சமயத்தில், கிணறு தோண்டி, வயல் அமைத்து, வீடு கட்டியும் மக்கள் விவசாயம் செய்தனர். 2005ல், நீதிமன்ற உத்தரவுபடி, ஏரிக்குள் இருந்த வீடுகள் அகற்றப்பட்டு, மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அத்திப்பட்டி,சூரியூர் பகுதியில் உள்ள, 1,400 ஏக்கர் விவசாய நிலத்தை திரும்ப கேட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை விவசாயிகள், பனமரத்துப்பட்டி ஏரிக்குள் சென்று, அத்திப்பட்டி, சூரியூர் பகுதியில் தாங்கள் வாழ்ந்த, விவசாயம் செய்த இடங்களை பார்வையிட்டனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
நேற்று ஆடி 1 என்பதால், நாங்கள் விவசாயம் செய்த அத்திப்பட்டி, சூரியூர் பகுதிக்கு சென்றோம். அங்குள்ள எங்களின் முன்னோர்கள் சமாதியில் வழிபட்டோம். நாங்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த காளியம்மன், முனியப்பன், மாரியம்மன், மங்கம்மாள், சித்தன் கோவிலில், எங்களுக்கு விவசாய நிலம் கிடைக்க வேண்டும் என, வேண்டுதல் வைத்து பிரார்த்தனை செய்தோம்.
இவ்வாறு கூறினர்.