ADDED : மே 10, 2024 07:33 AM
ஏற்காடு : ஏற்காடு, லாங்கில்பேட்டை முதல் வீதியை சேர்ந்தவர் சந்திரபாபு ராவ், 59.
இவரது மனைவி லீலாவதி, 55. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நேற்று இரவு, 8:00 மணிக்கு, ஓட்டு வீட்டில் காஸ் சிலிண்டர் இல்லாததால் விறகு அடுப்பு மூலம் சமைத்துவிட்டு அருகே உள்ள கோவில் திருவிழாவுக்கு சென்றனர். பின், 9:20க்கு வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் தீப்பற்றி எரிந்தது. தம்பதியர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். தகவல்படி, 9:50க்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பழமையான வீடு என்பதால் கூரைக்கு போடப்பட்டிருந்த மரக்கட்டைகள் பிடித்து எரிந்ததால் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. ஒன்றரை மணி நேரத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின.