/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மீன் அமில தயாரிப்பு முறை: விவசாயிகளுக்கு அறிவுரை
/
மீன் அமில தயாரிப்பு முறை: விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : செப் 22, 2024 05:05 AM
வீரபாண்டி: மீன் அமில தயாரிப்பு முறை குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் அறிக்கை: பயிர்களின் வளர்ச்சிக்கு மீன் அமிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கரைசல் தேவையான ஊட்டச்சத்துகள், வளர்ச்சி ஊக்கிகளை பயிர்களுக்கு அளித்து அதிக விளைச்சலை பெற செய்கிறது. இதை தெளிப்பதால் பயிர்கள் வறட்சியை தாங்கி வளர்வதோடு கூடுதல் மகசூல் பெற முடியும். இதை தயாரிக்க மீன் கழிவான தலை, குடல், வால் பாகங்களை தனியே எடுத்து தண்ணீரின்றி நன்றாக வடிகட்டி சேகரிக்க வேண்டும். 5 கிலோ மீன் கழிவுக்கு, 5 கிலோ கரும்பு சர்க்கரை என்ற அளவில் எடுத்து பெரிய மண் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில், இரண்டையும் ஒன்றாக கலந்து வைக்க வேண்டும். பாத்திரத்தில் முக்கால் பங்கு காலியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
இந்த கலவையை பருத்தி துணியால் இறுக்கமாக மூடி, 15 நாட்கள் அப்படியே வைத்து நன்றாக நொதிக்க செய்து, பின் கலந்து விட்டால் அதிலிருந்து கிடைக்கும் கரைசலை வடித்து சேமித்து வைத்து, 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். இக்கரைசலை இலை வழியாகவும், சொட்டு நீர் பாசனத்தில் கலந்தும் இடலாம்.
இலை வழியே தெளிக்க, அனைத்து பயிர்களுக்கும் ஒரு லிட்டர் நீரில், 20 மி.லி., கரைசல் கலந்து, 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். பயிர் ஊக்கியாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு, 20 லிட்டர் கரைசலை சொட்டு நீர் பாசனத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இடலாம். பல ஆண்டு பயிர்களான தென்னை, பாக்கு போன்ற மரங்களுக்கு, ஒரு மரத்துக்கு, 300 மி.லி., என்ற அளவில் தெளிக்கலாம்.
இக்கரைசலை சொட்டு நீர் பாசனம் மூலம் செலுத்தும்போது மற்ற ரசாயன உரங்கள் அல்லது பூச்சி கொல்லி என எதையும் கலக்க கூடாது. மற்ற இலை வழி தெளிப்பான்களை பயன்படுத்தியிருந்தால், 15 நாட்கள் கழித்து தனியே மீன் அமில கரைசலை தெளிக்க வேண்டும். இப்படி செய்தால் அங்கக வேளாண்மையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பயிர் ஊக்கியாக செயல்பட்டு கூடுதல் மகசூல் கிடைக்கும். விவசாயிகள், இந்த வழிமுறைகளை பின்பற்றி பயன்பெறலாம்.