/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சரபங்காவில் வெள்ளம்; 50 வீடுகளை சூழ்ந்தது
/
சரபங்காவில் வெள்ளம்; 50 வீடுகளை சூழ்ந்தது
ADDED : டிச 04, 2024 07:01 AM
இடைப்பாடி: சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள நுால் நிலையம் பின்புறம் மற்றும் நைனாம்பட்டியில் ஆற்றங்கரையோரம் உள்ள, 50க்கும் மேற்பட்ட வீடுகளை நேற்று மழைநீர் சூழ்ந்தது. இதனால் மக்கள், அருகே உள்ள உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இதில் பாதிக்கப்பட்ட, 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை, இடைப்பாடி நகராட்சி தொடக்கப்பள்ளியில், வருவாய்த்துறையினர் தங்க வைத்துள்ளனர்.
இடைப்பாடி பஸ் ஸ்டாண்டை ஒட்டியுள்ள சரபங்கா ஆற்றின் பாலத்தில் ஆகாயத்தாமரைகள், புற்கள் அடைத்துக்கொண்டதால் அதிகளவில் தண்ணீர் தேங்கியது. சரபங்காவில் இருந்த ஆகாயத்தாமரைகளை, நேற்று இரவு வரை அதிகாரிகள் அகற்றினர். மேலும் இடைப்பாடி தாலுகாவில் உள்ள வெள்ளாளபுரம், சின்னப்பம்பட்டி, தாதாபுரம், இடைப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள ஆற்றில் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.சுடுகாட்டில் உடல்கள்
காடையாம்பட்டி தாலுகா தாத்தியம்பட்டியில் செல்லும் சரபங்கா ஆற்றின் கரையோரம் சுடுகாடு அமைந்துள்ளது. இரு நாட்களாக ஆற்றில் தண்ணீர் செல்வதால், அங்குள்ள சமாதியில் புதைப்பட்ட பிரேதங்களின் உடல்கள் தெரிவதாக தகவல் பரவின. வருவாய், ஊரக வளர்ச்சி அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது வேட்டி மட்டும் தெரிந்துள்ளது. இருப்பினும் தண்ணீர் அதிகளவில் செல்வதால் ஒன்றும் செய்ய முடியாத சூழல் உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தரைப்பாலம் மூழ்கியது
தேவூர் அருகே அரசிராமணி சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கால் அப்பகுதி விவசாய நிலங்கள் மூழ்கியுள்ளன. மோலாணி முனியப்பன் கோவிலில் தண்ணீர் சூழ்ந்து, குள்ளம்பட்டியில் இருந்து வெள்ளூற்று பெருமாள் கோவில் செல்லும் சாலையில் ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள சரபங்கா தரைப்பாலம்; அம்மன் கோவில் பாலம்; செட்டிப்பட்டி, தைலாங்காடு தரைப்பாலம்; கந்தாயிகாடு தரைப்பாலம் ஆகியவை மூழ்கிவிட்டன. இதனால் மலைமாரியம்மன் கோவில், மலங்காடு, கிழக்கு ஓலப்பாளையம், மேற்கு ஓலப்பாளையம், வெள்ளூற்று பெருமாள் கோவில், ஆரையான்காடு, சுக்கலான்காடு, வண்ணாங்காடு, கோட்டக்காடு, கந்தாயிகாடு, தைலாங்காடு உள்ளிட்ட கிராமப்புற மக்கள், அந்த வழியே செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செட்டிப்பட்டி சுடலை காளியம்மன் கோவிலில் உள்ள துர்கை உள்ளிட்ட பல்வேறு சிலைகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அரசிராமணி டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர், வருவாய்த்துறையினர், ஆங்காங்கே மூங்கில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.