ADDED : பிப் 17, 2024 07:13 AM
சேலம் : சேலம், குமாரசாமிப்பட்டி, சீரங்கபாளையம் சாலையை சேர்ந்தவர் நாகராஜூ, 60. சீட் கவர் தொழில் செய்து வரும் இவர், மாநகர் குற்றப்பிரிவில் அளித்த புகார் மனு:
அஸ்தம்பட்டி, இட்டேரி சாலையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், 2018ல் என் வீடு அருகே அடகு கடை நடத்தியபோது, அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அழகாபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, 50 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக கேட்டார். நான் வயது முதிர்வை காரணம் காட்டி தவிர்த்து விட்டேன். ஆனால் அதற்கு அவர், அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு தருவதாக கூறினார்.
அதை நம்பி அவரிடம், 48.70 லட்சம் ரூபாயை, 2018ல் கொடுத்தேன். அதை ஈடு செய்ய, சின்னதிருப்பதியில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் பத்திரத்தை என்னிடம் கொடுத்தார். சில நாட்கள் கழித்து அடுக்குமாடி குடியிருப்புக்கு மேலும் பணம் தேவைப்படுவதாக கூறி, நில பத்திரத்தை திருப்பி வாங்கி கொண்டார். பின் அடுக்குமாடி கட்டியும் அதில் வீடு ஒதுக்கவில்லை. பணத்தையும் தராமல் ஏமாற்றியதோடு, கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இதுகுறித்து விசாரித்து பணத்தை பெற்று தருவதோடு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதையடுத்து நேற்று, மோசடி, கொலை மிரட்டல் பிரிவுகளில் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.