/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'அரசு ஊழியர் போராட்டம் தேர்தல் பணியை பாதிக்காது'
/
'அரசு ஊழியர் போராட்டம் தேர்தல் பணியை பாதிக்காது'
ADDED : மார் 07, 2024 06:37 AM
சேலம் : ''அரசு ஊழியர்களின் போராட்டத்தால் தேர்தல் பணி பாதிக்காது,'' என, இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன் தெரிவித்தார்.
இதுகுறித்து சேலத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி, அரசியல் நாகரீகத்தை கடைப்பிடிக்க வேண்டும். விழாவில் பங்கேற்ற எம்.பி., கனிமொழி, அமைச்சர் வேலு உள்ளிட்டோரின் பெயர்களை தவிர்த்திருக்கிறார்.
அதேபோல் கட்சி கூட்டத்தில் பேசியபோது, 'தி.மு.க.,வை அழிப்பேன்' என கூறியிருப்பது, அவரது உண்மையான ஹிட்லர் முகத்தை காட்டுகிறது. பதவிக்கு ஏற்ப பிரசாரம் இருக்க வேண்டும். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துாத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட, 7 மாவட்டங்களுக்கு நிவாரணமாக, தமிழக அரசு கோரிய, 37,000 கோடி ரூபாயில், ஒரு காசு கூட மத்திய அரசு வழங்கவில்லை. அத்துடன் மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் நிதி தரவில்லை.
குஜராத் துறைமுகம் மூலம் நாடு முழுதும் போதைப்பொருள் கடத்துவதை தடுக்காத மத்திய அரசு, தி.மு.க., மீது பழிபோட முயற்சிக்கிறது. பா.ஜ.,வின், 10 ஆண்டு ஆட்சியில் தேர்தல் கமிஷன், ரிசர்வ் வங்கி, அமலாக்கத்துறை உள்ளிட்டவை தன்னிச்சையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் போராட்டத்தால் தேர்தல் பணி பாதிக்காது. தமிழகத்தில் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வுகளால், தி.மு.க., கூட்டணிக்கு, தேர்தலில் பாதிப்பு வராது. இவ்வாறு அவர் கூறினார்.

