/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்; வேட்டி, சேலை கிடைக்காததால் ஏமாற்றம்
/
அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்; வேட்டி, சேலை கிடைக்காததால் ஏமாற்றம்
அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்; வேட்டி, சேலை கிடைக்காததால் ஏமாற்றம்
அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்; வேட்டி, சேலை கிடைக்காததால் ஏமாற்றம்
ADDED : ஜன 10, 2025 07:14 AM
சேலம்: பொங்கல் தொகுப்புடன் வழங்க வேண்டிய வேட்டி, சேலைகள் வழங்கப்படாததால், ரேஷன் கார்டுதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் வேட்டி, சேலை இலவசமாக வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. நேற்று முதல் வினியோகம் தொடங்கியது. மாநில அளவில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி மட்டும் வழங்கப்படுகிறது. சில கடைகளில் மட்டும் இலவச சேலையும் சேர்த்து வழங்குகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில் வேட்டி அல்லது சேலை மட்டும் வழங்கப்பட்டது. இதற்கு காரணம், தேவையான வேட்டி, சேலைகள் முழுமையாக வந்து சேராததே. ஓமலுார் தாலுகா தாரமங்கலம், ஓமலுார் பகுதிகளில், 108 முழு நேரம், 28 பகுதி நேரம் என, 136 ரேஷன் கடைகள் உள்ளன. அதில் லட்சம் கார்டுதாரர்கள் உள்ளனர். அப்பகுதிகளில் பொங்கல் தொகுப்புடன் சிலருக்கு மட்டும் வேட்டி, சேலை வழங்கப்பட்டது. குறிப்பாக ஆண்கள் வந்தால் வேட்டி, பெண்கள் வந்தால் சேலை என வழங்கினர். சில மணி நேரத்தில் இரண்டும் தீர்ந்துவிட, அரிசி, சர்க்கரை, கரும்பு மட்டும் வழங்கப்பட்டன. இதனால் கார்டுதாரர்கள் அதிருப்தி அடைந்து புலம்பிச்சென்றனர்.
அதேபோல் காடையாம்பட்டி தாலுகாவில், 59 முழு நேர கடை, 40 பகுதி நேர கடைகள் உள்ளன. 52,612 கார்டுதாரர்கள் உள்ளனர். அந்த வட்டத்தில் உள்ள பல கடைகளிலும், பற்றாக்குறையால் வேட்டி அல்லது சேலை வழங்கப்பட்டன. இதேபோல் மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில், இதே நிலையில் தான் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன. ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் இதே போல் தான் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக, சேலம் அஸ்தம்பட்டி, சீரங்கபாளையம் ரேஷன் கடையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை, கலெக்டர் பிருந்தாதேவி தொடங்கி வைத்து பேசியதாவது: சேலம் மாவட்டத்தில், 10.78 லட்சம் குடும்பங்களுக்கு, 12.18 கோடி ரூபாய் மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அரிசி கார்டுதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். சிரமமின்றி ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். இதுகுறித்த கோரிக்கை இருப்பின், கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை, 0427 2416787, 73387 21707 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் எம்.பி., செல்வகணபதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் மீராபாய் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.