/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் சாரல் மழை; ஏற்காட்டில் பனிமூட்டம்
/
சேலத்தில் சாரல் மழை; ஏற்காட்டில் பனிமூட்டம்
ADDED : டிச 01, 2024 01:10 AM
சேலத்தில் சாரல் மழை; ஏற்காட்டில் பனிமூட்டம்
சேலம், டிச. 1-
வங்க கடலில் உருவான புயலால், சேலத்தில் நேற்று அதிகாலை முதலே, சாரல் மழை பெய்தது. விட்டுவிட்டு சாரல் மழை, கனமழை என மாலை வரை தொடர்ந்து பெய்தது. காற்றின் வேகமும் அதிகம் இருந்தது. குளிர்காற்று, மழையால், குளிர்ந்த சூழல் நிலவியது. குறிப்பாக முதியோர், குழந்தைகள், பெண்கள் வீட்டுக்குள் முடங்கினர். பள்ளி மாணவர்கள் பெரும்பாலானோர், 'ஸ்வெட்டர், ரெயின்கோட்' அணிந்து,
பள்ளிக்கு சென்று வந்தனர்.
அதேபோல் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை, 4:00 மணி முதல் மாலை, 5:00 மணிக்கு மேலும் மழை பெய்து வந்தது. இதனால் சாலை, தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஏற்காட்டில் நேற்று காலை முதல் பனிமூட்டத்துடன் மழை பெய்ததோடு கடுங்குளிர் நிலவியது. இதனால், 5 அடியில் வரும் வாகனங்கள் கூட தெரியாத சூழல் இருந்தது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர். கூலி வேலைக்கு செல்லும் தோட்ட, கட்டட தொழிலாளர்கள், வீடுகளில் முடங்கினர். மேலும் பள்ளி மாணவ, மாணவியர் சிரமத்துக்கு ஆளாகினர்.
நேற்று காலை வரை சேலம் மாவட்டத்தில், கெங்கவல்லியில், 4 மி.மீ., சங்ககிரி, 3.2, ஆத்துார், 2.6, ஏற்காடு, 1.2, சேலம், 0.2 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.