ADDED : ஆக 05, 2025 01:05 AM
ஏற்காடு, ஏற்காட்டில் நேற்று காலை முதல், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மதியம், 12:35 மணிக்கு ஏற்காடு டவுன், ஒண்டிக்கடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில இடங்களில் திடீரென இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது.
மூன்று மணி நேரம் அதாவது மதியம், 3:40 வரை கொட்டி தீர்த்தது. பின், 4:20 மணி வரை லேசான சாரல் மழை பெய்தது. இதனால் ஏற்காடு முழுவதும் குளுகுளுவென மாறியது. தட்பவெப்ப நிலையை சுற்றுலா பயணிகள் ரசித்து
மகிழ்ந்தனர்.* ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம், 2:00 மணியளவில், மேகமூட்டமாக இருந்தது. 3:00 மணியளவில் ஆத்துார், நரசிங்கபுரம், கொத்தாம்பாடி, கல்பகனுார், அம்மம்பாளையம், துலுக்கனுார், கல்லாநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது.
தொடர்ந்து மாலை, 5:30 மணி வரை, மழை பெய்து கொண்டிருந்தது. கன மழையில், சாலை,
தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை பெய்ததால், குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளதால், மக்கள்
மகிழ்ச்சியடைந்தனர்.
* வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. மதியம், 3:30 மணிக்கு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, வாழப்பாடி, மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சிங்கிபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் மிதமான மழை பெய்தது.
அதேபோல், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், தும்பல், கருமந்துறை உள்ளிட்ட பகுதியில் கன மழை கொட்டியது. இதனால் குளிர்ந்த சூழ்நிலை நிலவியதால், அப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.