/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூரில் கொட்டிய மழை: ஓடையில் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து துண்டிப்பு
/
மேட்டூரில் கொட்டிய மழை: ஓடையில் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து துண்டிப்பு
மேட்டூரில் கொட்டிய மழை: ஓடையில் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து துண்டிப்பு
மேட்டூரில் கொட்டிய மழை: ஓடையில் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து துண்டிப்பு
ADDED : அக் 23, 2024 07:15 AM
மேட்டூர்: மேட்டூரில் கொட்டிய மழையால் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.சேலம் மாவட்டம் மேட்டூர் சுற்றுப்பகுதியில் நேற்று முன்தினம், 144.6 மி.மீ., நேற்று, 62.2 மி.மீ., மழை பதிவானது. இதனால் நங்கவள்ளி, வீரக்கல் அடுத்த ஒட்டுப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த நீருடன் சிட்கோ கழிவுநீர், விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர் கலந்து சின்னகாவூர் அருகே மேட்டூர் அணை உபரிநீர் வெளியேறும் காவிரியாற்றில் கலந்தது.
தங்கமாபுரிபட்டணத்தில் இருந்து சிறுதங்கல் காட்டுவளவுக்கு செல்ல தரைப்பாலம் உள்ளது. அந்த பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்றதால், மக்கள் தங்கமாபுரிபட்டணம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மறுகரையில் உள்ள கோபாலன் கட்டுவளவு, சிறுதங்கல்காட்டுவளவு, சின்னையன்ரெட்டி தெரு உள்ளிட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரும், சின்னகாவூர், ஒட்டுபள்ளம் வழியே சுற்றிச்சென்றனர்.
'பங்க்'கில் புகுந்தது
மேட்டூர் - பவானி நெடுஞ்சாலையோரம், காவேரிகிராஸ் அருகே உள்ள பாரத் பெட்ரோல் பங்க் வளாகத்தில் மழைநீர் புகுந்து தேங்கியது. அதன் உரிமையாளர், பொக்லைன் மூலம் வடிகாலில் உள்ள அடைப்பை நீக்கி சாலையில் வெள்ள நீர் செல்ல நடவடிக்கை எடுத்தார். இதனால் காலை, பங்க்குக்கு பெட்ரோல் போட வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சுற்றுச்சுவர் சேதம்
மேட்டூர், 840 மெகாவாட் அனல்மின் நிலையத்தை சுற்றி, 15 அடி முதல், 25 அடி உயரம் வரை சுற்றுச்சுவர் உள்ளது. அது கட்டி, 40 ஆண்டுகளுக்கு மேலானதால் பலவீனமாகி விட்டன. இந்நிலையில் மழையால், அனல்மின் நிலைய பின்புறம் ஏரிக்காட்டில் உள்ள சுற்றுச்சுவரி், 80 அடி நீளத்துக்கு நேற்று காலை இடிந்து விழுந்தது. மக்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பள்ளிக்கு விடுமுறை
கொளத்துார், நவப்பட்டி ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்றும் மழை பெய்து தண்ணீர் தேங்கியதால், 2ம் நாளாக விடுமுறை விடப்பட்டது. துாய்மை பணியாளர்கள், மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மாதையன்குட்டை, மேட்டூர் நகராட்சி பகுதியில் உள்ள சில வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.
அணை நீர்மட்டம்; 98 அடியாக உயர்வு
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு கடந்த, 14ல், 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. பின் டெல்டாவில் மழை தீவிரம் குறைய, 20ல் நீர்திறப்பு, 3,000 கனஅடியாகவும், நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, 7,500 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. அணைக்கு நேற்று வினாடிக்கு, 17,586 கனஅடி நீர் வந்தது. திறப்பை விட வரத்து கூடுதலாக உள்ளதால், நேற்று முன்தினம், 97.89 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 98.56 அடியாக உயர்ந்தது.

