/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மாவட்டம் முழுதும் கொட்டிய மழை பாறை, மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
/
சேலம் மாவட்டம் முழுதும் கொட்டிய மழை பாறை, மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
சேலம் மாவட்டம் முழுதும் கொட்டிய மழை பாறை, மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
சேலம் மாவட்டம் முழுதும் கொட்டிய மழை பாறை, மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 23, 2025 01:57 AM
சேலம், சேலம் மாவட்டத்தில் கடந்த, 16 முதல், வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, சேலம் புதிய, பழைய பஸ் ஸ்டாண்டுகள், 4, 5 ரோடுகள், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கோரிமேடு, அம்மாபேட்டை, பொன்னமாபேட்டை, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி உள்பட, மாநகரின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு பெய்த மித மழை, காலை வரை நீடித்தது. அதேநிலை மாவட்ட பகுதிகளில் காணப்பட்டது.
நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக நத்தக்கரையில், 68 மி.மீ., மழை பெய்தது. ஏற்காட்டில், 64.2, கரியகோவில், 52, ஆணைமடுவு, 50, வாழப்பாடி, 32, ஏத்தாப்பூர், 28, கெங்கவல்லி, 27, வீரகனுார், 20, சேலம், 18.9, ஆத்துார், 18, தம்மம்பட்டி, 16, டேனிஷ்பேட்டை, 14.5, மேட்டூர், ஓமலுாரில் தலா, 10.6, இடைப்பாடி, 7.2, சங்ககிரி, 3.2 மி.மீ., என பதிவானது.
நேற்று மதியம், 12:00 மணிவரை, வானம் வெளிச்சமாக காணப்பட்ட நிலையில், பின் மேக கூட்டங்கள் திரண்டு, தொடங்கிய மழை, மதியம், 2:00 மணி வரை நீடித்தது. இடைவிடாத மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள், ரெயின்கோட், தொப்பி அணிந்து ஊர்ந்தபடி சென்றனர். பாதசாரிகள் குடைகளை பிடித்தபடி சென்றனர். மழையால், காலையிலேயே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2,404 அரசு, தனியார் பள்ளிகள் மாவட்டத்தில் இயங்கவில்லை
.கொளத்துார், பாலமலை ஊராட்சி கடல் மட்டத்தில் இருந்து, 3,000 அடி உயரத்துக்கு மேல் மலைப்பகுதியில் உள்ளது. அங்கு, 33 குக்கிராமங்களில் மக்கள் வசிக்கின்றனர். கிராமங்களுக்கு செல்ல அடிவாரத்தில் உள்ள கண்ணாமூச்சியில் இருந்து, 7.3 கி.மீ., மலைப்பகுதிக்கு, மண்சாலை உள்ளது. அப்பகுதியில் பெய்த மழையால், நேற்று மாலை, மலைக்கு செல்லும், 6வது வளைவில் பாறைகள், சற்று துாரத்தில் மரம் முறிந்து விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை தொடர்ந்து நீடித்ததால், பாறை, மரம் அகற்றும் பணி இன்று நடக்கும்.
வீட்டின் சுவர் சேதம்
ஆத்துார், தலைவாசல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை, சாரல் மழையாக பெய்தது. மதியம், கன மழையாக பெய்தது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கினர். அதேபோல் கெங்கவல்லி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 4 நாட்களாகவே மழை பெய்து வருகிறது. நேற்றும் இடைவிடாமல் பெய்த மழையால், மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
கெங்கவல்லி, இந்திரா நகரை சேர்ந்த, வீரன், 50, என்பவரது தகர சீட் போடப்பட்ட கூரை வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. தாசில்தார் நாகலட்சுமி தலைமையில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து, அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, இழப்பீடு வழங்குவது தொடர்பான அறிக்கையை, நேற்று சேலம் கலெக்டருக்கு அனுப்பினர்.
20 ஏக்கர் நெற்பயிர் நாசம்
மேட்டூர் அணை கால்வாய் நீர் மூலம் பாசன வசதி பெறும் நவப்பட்டி
ஊராட்சியில் கடந்த ஜூலையில்,
138 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்தனர். அதில், பெரும்பாலான விவசாயிகள், 110 நாட்களில் அறுவடைக்கு வரும் ஏ.டீ.டி., 37 ரக நெல் சாகுபடி செய்தனர். தற்போது பயிர்கள் முதிர்ந்து அறுவடைக்கு தயாராகி விட்டன. ஆனால் விவசாயிகளின், 20 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்கள் முதிர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சில நாட்களாக பெய்த மழையால், தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கி சேதமாகின. இதனால் கிருஷ்ணன், ராமலிங்கம், கணேசன், ரவி உள்ளிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கிருஷ்ணன் கூறுகையில், ''3 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்தேன். இதற்கு, 1.20 லட்சம் ரூபாய் செலவானது. பயிர்கள் முதிர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில், மழைநீர் தேங்கி, நெற்பயிர்கள் மூழ்கிவிட்டன. இனி அறுவடை செய்ய முடியாது. உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,'' என்றார்.
அதேபோல், 20 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமானதால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் பூலாம்பட்டியில் ரோஜா தோட்டம், பில்லுக்குறிச்சியில் கரும்பு தோட்டத்தில் மழைநீர் புகுந்து, விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
அரளி தொழிலாளர் அவதி
பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 800 ஹெக்டேரில் அரளி நடவு செய்யப்பட்டுள்ளது. தினமும் அதிகாலை, செடியிலிருந்து அரளி மொக்கு பறித்து, ஒரு கிலோ வீதம் பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். இந்த வேலையில், 10,000க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். ஒரு கிலோ மொக்கு பறிக்க, 50 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு வாரமாக, தினமும் இரவில் மழையால், செடியில் தண்ணீர், வயலில் சேறு, சகதி உள்ளது. செடியை சுற்றி வந்து மொக்கு பறிக்க தொழிலாளர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். தொடர் மழை, குளிர் ஆகியவற்றால், பல இடங்களில் மொக்கு பறிக்காமல் செடியில் விடப்பட்டுள்ளது.
அதேபோல் சேலம் மாவட்டம் முழுதும், இடைவிடாத பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நனையும் ரேஷன் பொருள்
அயோத்தியாப்பட்டணம் அடுத்த சின்னனுார் காளியம்மன் கோவில் அருகே, 20 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட ரேஷன் கடை சேதமடைந்துள்ளது. இந்நிலையில் தொடர் மழையால், கடைக்குள் உள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மழையில் நனைந்து வருகின்றன. அதன் வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர். மேலும் மாசிநாயக்கன்பட்டியில் சேலம் - உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள், மக்கள் அவதிக்குள்ளாகினர். அங்கு மழைநீர் தேங்காதபடி, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த கருமந்துறை அருகே அய்யாதுரை ஓடையில், நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக கருமந்துறை செல்லும் பிரதான சாலையில், தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். கெங்கவல்லி அருகே கடம்பூரில் உள்ள மலைப்பகுதியில், கழுகுமலை நீர் வீழ்ச்சி உள்ளது. அங்கு தண்ணீர் அதிகளவில் வரத்தொடங்கியுள்ளது.
மைதானத்தில் தேங்கியது
சென்னகிரி ஊராட்சி அலுவலகம் அருகே, 1.65 ஏக்கரில் விளையாட்டு மைதானம் உள்ளது. அதன் அருகே உள்ள குட்டையில் இருந்து மழைநீர் வந்து, மைதானத்தில் தேங்கி நிற்கிறது. அதேபோல் இருசனாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி அருகே உள்ள குட்டையில் இருந்து வரும் மழைநீர், பள்ளி உட்பகுதிக்கு சென்று தேங்கி நிற்கிறது. இரு இடங்களிலும், மழைநீர் தேங்குவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சறுக்கி விழுந்து
தொழிலாளி சாவு
சேலம், குகை, அம்பலவாணன் தெருவை சேர்ந்தவர் செந்தில், 39. இவர் தந்தை மனோகரனுடன் சேர்ந்து வெள்ளி பட்டறையில் பணிபுரிந்து வந்தார். சூரமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே, 'பேஷன் புரோ' பைக்கில், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்த நிலையில், வேகத்தடை மீது ஏறிய அவர், நிலை தடுமாறி விழுந்தார். ஹெல்மெட் அணியாததால், அவரது பின்புற தலையில் படுகாயம் ஏற்பட்டது. மக்கள், அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் நேற்று மதியம் உயிரிழந்தார். சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.