ADDED : அக் 23, 2025 01:56 AM
ஏற்காடு, ஏற்காட்டில் நேற்று முன்தினம் அதிகாலை முதல், தொடர் மழை பெய்தது. நேற்றும் ஏற்காடு, அதன் சுற்றுப்பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் புலியூர் மலை கிராமத்துக்கு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில், மழைநீர் அதிக அளவில் சென்றது.
இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர். அதேபோல் குப்பனுார் மலைப்பாதையில் உள்ள ஆத்துப்பால பகுதியில் ஓடும் ஆறு உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.நிலச்சரிவு
குப்பனுார் மலைப்பாதை, கொட்டச்சேடு கிராமத்தை அடுத்து மலைப்பாதை ஓர சாலையின் தடுப்புச்சுவர் சரிந்து, சிறு அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறையினர், அங்கு தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். அதேபோல், கொண்டையனுார் மலைக்கிராமத்துக்கு செல்லும் சாலை ஓரம் இருந்த சவுக்கு மரம், வேரோடு சாய்ந்து, 2 மின்கம்பங்கள் சாய்ந்து, கம்பிகள் அறுந்ததால், மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய பணியாளர்கள், மக்கள் உதவியுடன் சாலை குறுக்கே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி, கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தொடர் மழையால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு, 7:00 மணி முதல், வரும், 24 வரை, ஏற்காடு பிரதான மலைப்பாதையான, கொண்டப்பநாயக்கன்பட்டி மலைப்பாதையில் சுற்றுலா மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்தும், குப்பனுார் மலைப்பாதையில், 4 சக்கர வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்தும், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.