/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கன மழையால் நெற்பயிர், மின்கம்பங்கள் சாய்ந்தன
/
கன மழையால் நெற்பயிர், மின்கம்பங்கள் சாய்ந்தன
ADDED : மே 09, 2025 02:46 AM
சேலம், சேலம் மாநகரில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை, காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சென்றது. குறிப்பாக அழகாபுரம், கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, சூரமங்கலம், கன்னங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். நேற்றும் சாலையில் பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. சில இடங்களில் சாலைகள் சேறும், சகதியாக மாறின. கலெக்டர் அலுவலகத்தில் தேங்கிய தண்ணீரை, மாநகராட்சி வாகனம் மூலம் அகற்றப்பட்டது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் கனமழையால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
அதிகபட்சமாக ஓமலுாரில், 75 மி.மீ., மழை பதிவானது. அதேபோல் சேலம், 37.5 மி.மீ., ஏத்தாப்பூர், 25, சங்ககிரி, 24, ஆத்துார், 23, மேட்டூர், 16.6, ஆணைமடுவு, நத்தக்கரை தலா, 16, கரியகோவில், 15, தம்மம்பட்டி, 8, ஏற்காடு, 4, வாழப்பாடி, 3.6, வீரகனுார், 3 என, 266.8 மி.மீ., மழை பதிவானது.
விவசாயிகள் சோகம்
கொளத்துார், நவப்பட்டி ஊராட்சி, காவிரி கரையோரம் உள்ளது. அங்கு, கோடைக்கு முன், 50 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள், பொன்னி நெல் சாகுபடி செய்தனர். அந்த பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில் அறுவடைக்கு சில நாட்களே இருந்தன. ஆனால் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், நெற்பயிர்கள் நிலத்தில் சாய்ந்தன. 2 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்கள் சாய்ந்ததால், விவசாயிகள் சோகம் அடைந்தனர்.
சுவர் இடிந்தது
அதேபோல் ஆட்டையாம்பட்டி, ரத்னவேல் கவுண்டர் காடு அருகே, நேற்று முன்தினம் இரவு, அடுத்தடுத்து மூன்று மின்கம்பங்கள் சாய்ந்தன. ஒயர்கள் அறுந்து விழுந்தன. மின்துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று இரவு வரை புது மின்கம்பம் அமைக்கப்படாததால், மக்கள் மின்சாரம் இன்றி அவதிக்கு ஆளாகின்றனர். அதே பகுதியில் வசிக்கும் தறித்தொழிலாளி ஜெயகோபி, 65, என்பவருக்கு சொந்தமான, பயன்பாட்டில் இல்லாத வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
மழையில் திருவிழா
பனமரத்துப்பட்டி, மல்லுார் சுற்றுவட்டார பகுதிகளில், இரண்டாம் நாளாக நேற்றும் மழை கொட்டியது. மாலை, 6:30 முதல், இரவு, 8:00 மணி வரை பெய்ததால், இரவு குளிர்ந்தது. இருப்பினும் இரவில் அரளி பூ பறிக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகினர். பெரமனுார், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் மாரியம்மன் திருவிழா நடந்தது. இரு நாட்களாக மழையில் திருவிழா கொண்டாடப்பட்டது.

