/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பயிர் பாதுகாப்புக்கு தோட்டக்கலைத்துறை அறிவுரை
/
பயிர் பாதுகாப்புக்கு தோட்டக்கலைத்துறை அறிவுரை
ADDED : அக் 21, 2024 07:11 AM
ஓமலுார்: வடகிழக்கு பருவ மழையால் பயிர்கள் பாதுகாப்பு குறித்து தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ஓமலுார் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சக்ரவர்த்தி அறிக்கை: ஓமலுார் வட்டாரத்தில் பழங்கள், காய்கறி, மலர்கள், வாசனை திரவிய பயிர்கள், மலை தோட்டப்பயிர்கள் என, 5,800 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருவ மழையின்போது, தோட்டங்களில் காய்ந்த, பட்டுப்போன மரக்கிளைகளை உடனே அகற்ற வேண்டும். மரங்களின் எடையை குறைக்கும்படி கவாத்து செய்ய வேண்டும்.
மர அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டு பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும். தோட்டத்தில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.இளம் செடிகள் காற்றினால் பாதிக்காதபடி தாங்கு குச்சிகளால் கட்ட வேண்டும். கன மழை, காற்று முடிந்ததும் மரங்களில் பாதிப்பு இருப்பின் கிளைகளை அகற்றி, தொழு உரம் இட வேண்டும். டிரைக்கோடெர்மோ விரிடி மற்றும் சூடோமோனாஸ் போன்ற பூஞ்சான உயிரியல் கொல்லி மருந்துகளை வேர் பகுதியில் இட்டு நோய் வராமல் தடுக்க வேண்டும். மழை அதிகம் உள்ள நாட்களில் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.
வாழையில் காற்றால் ஏற்படும் பாதிப்புகளை மரத்தின் அடியில் மண் அணைத்தல், சவுக்கு குச்சிகளை ஊன்றி முட்டு கொடுக்க வேண்டும். 75 சதவீத முதிர்ந்த வாழைகளை அறுவடை செய்ய வேண்டும். வாழை, மரவள்ளி, வெங்காயம், தக்காளி போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய வேண்டும். நீர் பாசனம், உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்.