/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'வைரஸ்' காய்ச்சல் அதிகரிப்பு: குணமாக வழிமுறை என்ன?
/
'வைரஸ்' காய்ச்சல் அதிகரிப்பு: குணமாக வழிமுறை என்ன?
'வைரஸ்' காய்ச்சல் அதிகரிப்பு: குணமாக வழிமுறை என்ன?
'வைரஸ்' காய்ச்சல் அதிகரிப்பு: குணமாக வழிமுறை என்ன?
ADDED : டிச 06, 2024 07:19 AM
சேலம்: 'பெஞ்சல்' புயலால் சேலம் மாவட்டத்தில் பெய்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பெரும்பாலான இடங்களில் சாக்கடை கலந்த கழிவுநீர், சாலைகளில் தேங்கியது. ஆங்காங்கே குப்பை கழிவு, சகதி, குவியலாக படர்ந்து காணப்படுகின்றன. அவை நீரில் அடித்துச்செல்லப்படாத நிலையில் துர்நாற்றத்தை தாங்க முடியாமல், கடந்து செல்லும் மக்கள், மூக்கை பிடித்தபடி செல்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு உண்டாகி, பலர் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதால், அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறியதாவது: காய்ச்சல் ஏற்பட, கிருமி தொற்றே காரணம். அதனால் வைரஸ் அல்லது பாக்டீரியா காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கும். மழை ஓய்ந்து அடுத்து வெயில் அடிக்கும் பருவநிலை மாற்றத்தை, செடி, கொடிகளில் உள்ள வைரஸ், சாதகமாக பயன்படுத்தி, இனப்பெருக்கத்தை அதிகப்படுத்தி பரவும். பருவ மழை முடிந்து வெயில் அடிக்கும் காலத்திலும், இதே பாதிப்பு தென்படும். தற்போது புயல் மழை முடிந்து வந்துள்ள காய்ச்சலுக்கு முக்கிய காரணம் வைரஸ்.
வேகமாக பரவும் வைரஸ், நம் சுவாச மண்டலம் வழியே உடலுக்குள் நுழைந்து காய்ச்சலை ஏற்படுத்தும். உடலில் பல்வேறு மண்டலங்களை பாதிக்க செய்யக்கூடும். கண்ணில் நீர் வடியும், சிவப்பாகும். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், வாசனையை உணர முடியாத நிலை, நாக்கில் ருசி தெரியாது, தொண்டை கரகரப்பாக இருத்தல், சுவாச மண்டலத்தை பாதித்து இருமலை உண்டாக்கி விடும். ஜீரண மண்டலத்தை பாதித்து பசியின்மை, வயிற்றுப்போக்கு, சில நேரங்களில் வயிற்று வலி போன்ற பாதிப்பு வரும். உடலில் தசை பகுதிகளை தாக்கி உடம்பு வலியை உண்டாக்கும். காய்ச்சல் விட்டு விட்டு வரும்போது, அதற்கு இடைப்பட்ட நேரம், 'நார்மல்' ஆக இருக்கும். அதனால் அலட்சியம் கூடாது. இத்தகைய பாதிப்பு குறைந்தது, 5 முதல், 7 நாள் இருக்கும். காய்ச்சல் வந்தால் உடனுக்குடன் சிகிச்சை, மருந்து, மாத்திரை உட்கொண்டால் பாதிப்பில் இருந்து மீண்டுவிடலாம். இதற்கு தனிமையுடன் கூடிய ஓய்வு, வெது வெதுப்பான நீரை அடிக்கடி பருக வேண்டும். மாமிச உணவு வகைகள், முட்டை, காய்கறி, சுண்டல், பழ வகைகள் என, புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால், வைரஸ் பாதிப்பின்றி போய்விடும். காரம், மசால் கலந்த உணவை குறைத்துக்கொள்வது நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் தேவிமீனாள் கூறுகையில், ''மழை காலங்களில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின்போது வைரஸ் காய்ச்சல் பாதிப்பு வருவது வழக்கம். அதற்கு அச்சப்பட வேண்டாம். முறையான சிகிச்சை, மருத்துவர் ஆலோசனைப்படி செயல்பட்டால், பாதிப்பில் இருந்து விரைவில் குணமடையலாம். மருந்து, மாத்திரையை தவறாமல் உட்கொள்ள வேண்டும்,'' என்றார்.