/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செக்கானுார் கதவணையில் பராமரிப்பு பணி துவக்கம்
/
செக்கானுார் கதவணையில் பராமரிப்பு பணி துவக்கம்
ADDED : மே 28, 2024 07:24 AM
மேட்டூர்: செக்கானுார் கதவணை மின் நிலையத்தில், நேற்று பராமரிப்பு பணிகள் துவங்கியது. மேட்டூர் அணை அடிவாரம் காவிரியாற்றின் குறுக்கே, 10 கி.மீ., துாரத்துக்கு ஒன்று வீதம் கரூர் வரை, 7 இடங்களில் கதவணை மின் உற்பத்தி நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது.ஒரு மின் நிலையத்தில், 30 மெகாவாட் வீதம், 7 கதவணை மின் நிலையங்களில் அதிகபட்சம், 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம். இதர கதவணை மின் நிலையங்களில் ஆண்டு பராமரிப்பு பணி நிறைவடைந்தது.
அணையில் இருந்து முதலாவதாக உள்ள, செக்கானுார் கதவணை மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணி நேற்று துவங்கியது. இதற்காக அணை அடிவாரம் முதல் கதவணை வரை தேக்கி வைக்கப்பட்ட, 0.5 டி.எம்.சி., நீர் கதவணை கீழ் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு முதல் வெளியேற்றப்பட்டது.
செக்கானுார் கதவணையில் மொத்தம், 18 ஷட்டர்கள் உள்ளன. நேற்று, 5 மற்றும் 6 ஆகிய இரு ஷட்டர்கள் மட்டும் உயர்த்தப்பட்டு தேக்கி வைத்த நீர் வெளியேற்றப்பட்டது. அந்த நீரில் செக்கானுார், கோல்நாயக்கப்பட்டி, சாணாவூர் உள்ளிட்ட சுற்று கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் வலைவீசி மீன்களை பிடித்தனர்.
பெரும்பாலும் கல்பாஸ், அரைஞ்சான் மீன்களே அதிகம் பிடிபட்டன. பராமரிப்பு பணிகள், 10 முதல், 12 நாட்கள் வரை நடக்கும். இந்த பணிகள் குறித்து காவிரி கரையோரம் அமைத்துள்ள சேலம், வேலுார் உள்ளிட்ட மாநகராட்சி நீரேற்று நிலையங்களுக்கு மின்வாரியம் சார்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.