ADDED : மே 13, 2025 02:06 AM
பனமரத்துப்பட்டி :பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 20 பஞ்சாயத்துகளை, 14 செயலாளர்கள் நிர்வாகம் செய்கின்றனர். காலி பணியிடம் நிரப்பாமல் உள்ளதால், ஒரு செயலர் இரு பஞ்சாயத்துகளை நிர்வாகம் செய்கிறார். நேற்று, ஏற்கனவே கூடுதல் பொறுப்பு வகித்த ஊராட்சியை மாற்றியும், தனி ஊராட்சியை நிர்வாகித்த செயலருக்கு, கூடுதல் ஊராட்சி பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:
நிர்வாக நலன் கருதி, குரால்நத்தம் ஊராட்சி செயலர் அசோக்குமாருக்கு, திப்பம்பட்டி ஊராட்சி, அம்மாபாளையம் ஊராட்சி செயலர் முத்துகுமாருக்கு, ஏர்வாடிவாணியம்படி ஊராட்சி, வாழக்குட்டப்பட்டி ஊராட்சி செயலர் ராஜ்குமாருக்கு, சந்தியூர் ஆட்டையாம்பட்டி ஊராட்சி கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
இவ்வாறு கூறினர்.
ஊராட்சி செயலர்கள் கூறுகையில்,'ஒரு சில செயலர்களுக்கு, தொடர்ந்து ஒரு ஊராட்சி மட்டும் ஒதுக்கப்படுகிறது. அவர்களுக்கு கூடுதல் ஊராட்சி பொறுப்பு வழங்கப்படுவதில்லை. சில செயலர்களுக்கு கூடுதல் பொறுப்பு என, மாற்றி, மாற்றி போடுகின்றனர். கலந்தாய்வு நடத்தி, கூடுதல் பொறுப்பு வழங்க வேண்டும்,' என்றனர்.