/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வங்கா நரியை வனத்துறையே பிடித்துத்தர வலியுறுத்தல்: வாழப்பாடி மக்கள் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்றுமா?
/
வங்கா நரியை வனத்துறையே பிடித்துத்தர வலியுறுத்தல்: வாழப்பாடி மக்கள் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்றுமா?
வங்கா நரியை வனத்துறையே பிடித்துத்தர வலியுறுத்தல்: வாழப்பாடி மக்கள் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்றுமா?
வங்கா நரியை வனத்துறையே பிடித்துத்தர வலியுறுத்தல்: வாழப்பாடி மக்கள் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்றுமா?
ADDED : ஜன 20, 2025 07:15 AM
வாழப்பாடி: பொங்கலில் வங்கா நரியை பிடித்து ஊர்வலமாக கொண்டு செல்வதை தடுக்க, வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதை மீறி பிடிக்க, மக்கள் திட்டமிட்டதால் பேச்சு நடத்தப்பட்டது. அதில் வங்கா நரியை வனத்துறையினரே பிடித்துத்தர மக்கள் வலியுறுத்தினர். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மார்கழியில் பயிர்களை அறுவடை செய்த பின், தையில் புது சாகுபடி செய்யும் முன், நரி முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை, இன்றும் சில கிராமங்களில் உள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன்பாளையம், கொட்டவாடி, ரங்கனுார், தமையனுார் ஊராட்சிகளில், அப்பகுதி மக்கள், காணும் பொங்கலன்று வங்காநரி பிடித்து வந்து கிராமத்தில் ஊர்வலமாக கொண்டு செல்வர்.
ஆனால் வங்கா நரியை பிடிக்க, வனத்துறை தடை விதித்தது. இருப்பினும் அந்த கிராம மக்கள், பாரம்பரிய நிகழ்வை கைவிட மனமின்றி, வங்கா நரியை பிடித்து காணும் பொங்கலில் ஊர்வலமாக கொண்டு வந்து, மீண்டும் பிடித்த இடத்திலேயே விட்டு அபராதம் செலுத்தினர். இருப்பினும், 2022ல் திருத்தப்பட்ட சட்டப்படி, அழிந்து வரும் உயிரினத்தை பாதுகாக்க வேண்டும் என்பதால், கடந்தாண்டு முதல், வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, வங்கா நரியை பிடிக்க விடாமல் தடுத்தனர்.
நடப்பாண்டில் சில நாட்களாக, வாழப்பாடி வனச்சரக அலுவலர்கள், பொங்கல் பண்டிகையில் வங்கா நரியை பிடிக்கக்கூடாது என, நோட்டீஸ், சுவர் விளம்பரம், கூட்டம் உள்ளிட்டவை மூலம் அறிவுறுத்தினர். அத்துடன் வங்கா நரியை பிடித்தால், 3 முதல், 7 ஆண்டு சிறை தண்டனை, 1 முதல், 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர். ஆனால் கிராம மக்கள், வனத்துறை அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனரே தவிர, ஒத்துழைப்பு வழங்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரவி, கடந்த, 13ல், வங்கா நரியை பிடித்து பொங்கல் கொண்டாடுவதை தடுக்க, 6 குழு அமைத்து, ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிட்டார். தொடர்ந்து, 4 கிராமங்களில், பகலில், 40 பேர், இரவில், 40 பேர் என, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதை மீறியும், கிராம மக்கள், வங்கா நரி பிடிக்க திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இதனால் நேற்று முன்தினம் கொட்டவாடியில், சேலம் உதவி வன பாதுகாவலர் செல்வகுமார் தலைமையில் பேச்சு நடத்தப்பட்டது.
இதுகுறித்து வாழப்பாடி வனச்சரக அலுவலர் அன்னப்பன் கூறுகையில், ''வங்கா நரி பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினம் என்பதால், பிடிக்க அனுமதி இல்லை. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து பொங்கல் கொண்டாட்டத்துக்கு, வங்கா நரியை வனத்துறையினரே பிடித்து வர கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து, உயர் அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
கொட்டவாடி ஊராட்சி முன்னாள் தலைவர் வேணுகோபால் கூறுகையில், ''பாரம்பரிய விழாவுக்கு வனத்துறை அனுமதி மறுப்பதால், கொட்டவாடி யில் விவசாயம் அழிந்து வருகிறது. மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் நரியை வனத்துறையினரே பாதுகாப்புடன் கொண்டு வந்து, பொங்கல் கொண்டாட அனுமதி அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.